தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்து முடிவெடுக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏ.,க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏ.,க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். பின்னர் அவர் அளித்த விளக்கத்தில் ‘சட்டசபை விதிப்படி எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியே இல்லை’ எனவும், ‘ஒருவரை இந்த இருக்கையில் அமர வைக்கக்கூடாது என கூற யாருக்கும் உரிமை இல்லை’ என்றும் விளக்கமளித்தார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று (அக்.,17) துவங்கிய நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எம்எல்ஏ.,க்கள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்றனர். அதிமுகவின் பழனிசாமி தரப்பு எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

எதிர்க்கட்சி துணை தலைவர் குறித்து பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தரப்பினர் மாறி மாறி சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், சட்டசபையில் தான் அறிவிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார். இந்த நிலையில் 2ம் நாள் கூட்டத்தொடருக்கு முன்னதாக பழனிசாமி தரப்பை சேர்ந்த 62 எம்எல்ஏ.,க்கள் சபாநாயகரை சந்தித்து ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, சட்டசபை கூடியதும் கேள்வி நேரத்தின்போது பழனிசாமி தரப்பினர் பேசவிடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்ட அப்பாவு, ‘கேள்வி நேரம் முடிந்ததும் பேச அனுமதி கொடுப்பதாகவும், அதுவரை அமைதி காக்கவும்’ என வலியுறுத்தினார்.

ஆனாலும், அதிமுக எம்எல்ஏ.,க்கள் எதிர்க்கட்சி துணை தலைவர் குறித்த முடிவை அறிவித்த பிறகு கேள்வி நேரத்தை துவக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அப்பாவு இருக்கையை விட்டு எழுந்து, ‘கலகம் செய்யும் நோக்கில் வந்துள்ளீர்கள்’ எனக்கூறி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏ.,க்களை வெளியேற்றுமாறு காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகளுக்கு பதில் சொல்ல பயந்து அதிமுக.,வினர் கூச்சலில் ஈடுபடுவதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.

இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்து சபாநாயகர் அறித்த விளக்கம்: ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடிப்படையில் உறுப்பினர்கள் அமர்ந்துள்ளனர். சபை மரபுப்படியே இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக நியமிக்கவும், ஆய்வுக்குழுவில் உதயகுமாரை சேர்க்கும்படியும் பழனிசாமி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், விதிப்படி எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற பதவியே இல்லை. எதிர்க்கட்சி துணைத்தலைவரை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

அலுவல் ஆய்வு குழு உறுப்பினர் நியமனத்தில் சபாநாயகருக்கே முழு அதிகாரம் உள்ளது. தேர்தல் ஆணைய பதிவேட்டில் இன்னும் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் பெயரும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி பெயரும் உள்ளது.

இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பன்னீர்செல்வம் கடிதத்தில் குறிப்பிட்டார். இருவரின் வலியுறுத்தல்களும் சரி. ஆனால் முடிவெடுக்க கூடிய அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே உள்ளது. எடுத்தோம், கவிழ்தோம் என எதையும் செய்யவில்லை. சபை முழு ஜனநாயகத்தோடு நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு உறுப்பினர் எனக்கு இந்த இடம் சவுகரியமாக இல்லை என கோரிக்கை விடுத்தால் மட்டுமே இருக்கை மாற்றப்படும். ஆனால், இந்த இருக்கையில் அவரை அமர வைக்கக்கூடாது என வேறொருவர் சொல்வதற்கு உரிமை இல்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வசதியான இருக்கை கேட்டபோது இந்த இடமே போதுமானது என அதிமுக ஆட்சியில் பதிலளித்தார்கள்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்காமல் இருக்கவே கலகம் செய்ததாகவே சந்தேகம் ஏற்படுகிறது. அவை முன்னவரின் கோரிக்கையை ஏற்று இன்று ஒரு நாள் மட்டும் இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் சட்டசபை நிகழ்வுகளில் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.

இதற்கிடையே வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, ‘சட்ட சபையில் அப்பாவு அரசியல் செய்கிறார். ஓ.பி.எஸ்.ஸுக்கு தி.மு.க. மறைமுகமாக ஆதவு கொடுப்பது என்பது நிரூபணமாகிறது. எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரத்தில் ஒரு தலைபட்சமாக தி.மு.க. செயல்படுகிறது’ என்று குற்றஞ்சாட்டினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal