வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதம் வரை நீடிக்கும். இந்த மழை தான் தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் நல்ல பலனை தரும்.

இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை வருகிற 20-ந் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே இந்திய வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதற்கான சாதகமான சூழ்நிலைகள் தென்படத் தொடங்கி உள்ளதாகவும், முதலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியே வலுப்பெற்று அதிக மழையை கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தற்போது வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

வடக்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நாளை (18-ந் தேதி) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வருகிற 20-ந் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. 21-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டு இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதனை இப்போது உடனடியாக கூற முடியாது எனவும், வரும் நாட்களில் வானிலையில் ஏற்படும் மாற்றத்தை பொறுத்தே புயல் சின்னம் தொடர்பாக தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயல் சின்னம் ஏற்படும் பட்சத்தில் அது ஆந்திரா, ஒடிசா நோக்கி நகர்ந்து நல்ல மழையை கொடுக்கும். தமிழகத்துக்கு இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. இதன் தாக்கத்தால் வருகிற 20-ந் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறுகையில், ‘‘சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்’’ என தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal