கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்து வந்த பாண்டித்துறை ரூ.50 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது!
புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. அரசு ஒப்பந்ததாரரான இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் ரிப்லெக்ட் விளக்குகள், செடிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒப்பந்தம் எடுத்தார். இதில் பல கோடி முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, நேற்று காலை முதல் திருச்சி மற்றும் மதுரையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பெரியார் நகரில் உள்ள பாண்டித்துரை வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர். இங்கு பாண்டிதுரையின் வீடு மற்றும் அலுவலகம் ஒரே வளாகத்தில் உள்ளது. இதில் தனித்தனி குழுக்களாக சென்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கைப்பற்றப்படும் ஆவணங்களின் அடிப்படையில் பாண்டித்துரையின் முறைகேடுகள் பற்றிய முழு விவரம் வெளிவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஒப்பந்ததாரர் பாண்டித்துரைக்கு சொந்தமான 5 இடங்களில் இரண்டாவது நாளாக இன்று சோதனை நடைபெற்று வருகிறது. இதில், ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.50 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.