எடப்பாடி அணியில் இருந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவியுள்ளார். இந்த சம்பவம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதிமுகவின் தலைமைப் பொறுப்பை கைப்பற்ற. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடந்து வருகிறது. கட்சிக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளும், இரட்டை தலைமை அல்லது ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என்று அவரது அணியை சேர்ந்த நிர்வாகிகளும், வலியுறுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவில், இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்த நிர்வாகிகள், ஒவ்வொருவராக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தை நாடிய போது, கீழமை நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தீர்ப்பு வந்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது, ‘இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லுபடியாகும் என்று உத்தரவு வந்தது’.

இதன் தொடர்ச்சியாக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு முடியும் வரையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணியிலிருந்த கட்சியின் முக்கிய, மூத்த நிர்வாகியான முன்னாள் எம்.பி.மைத்ரேயன் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தாவி உள்ளார்.

இதுகுறித்து மைத்ரேயன் பேசுகையில், “யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல எனக்கு புத்தி பேதலித்தால் வேலியைத் தாண்டிய வெள்ளாடாக மாறினேன். எடப்பாடி அணியில் இணைந்து 108 நாட்களில் இப்போது மீண்டும் ஓபிஎஸ் அணிக்குத் திரும்பி உள்ளேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது எதிரணி என்று கூட பார்க்காமல் நலம் விசாரித்தார் ஓபிஎஸ். அனைவரையும் ஒருங்கிணைத்து அதிமுக இயக்கத்தை வழிநடத்தும் திறன் ஓபிஎஸ்ஸுக்கே உள்ளது.” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal