நாட்டில் கற்பழிப்பு கலாச்சாரம் தலைதூக்கி வரும் நிலையில், பள்ளிக்கூட கழிவறையில் மாணவியை, இரண்டு மாணவர்கள் கற்பழித்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லி போலீஸ் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 11 வயது பள்ளி மாணவி பெற்றோருடன் சென்று ஒரு புகார் கொடுத்தார். அதில் பள்ளி கழிவறையில் மூத்த மாணவர்கள் 2 பேர் தன்னை கற்பழித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இப்புகார் பற்றி டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த பள்ளிக்கு சென்றும் விசாரணை மேற்கொண்டனர். இதில் கற்பழிப்பு சம்பவம் குறித்து மாணவியோ, அவரது பெற்றோரோ தங்களிடம் தெரிவிக்கவில்லை என பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் ஜூலை மாதம் நடந்திருக்கலாம் எனவும் கூறினர். இந்த தகவல் வெளியானதும் டெல்லி மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது. மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் கூறும்போது, இந்த சம்பவத்தை மூடி மறைக்க பள்ளி நிர்வாகம் முயற்சித்து உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி, தனது வகுப்பு ஆசிரியையிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இதனை போலீசாருக்கு தெரிவிக்காமல் மறைத்து உள்ளனர்.

எனவே இதுபற்றி முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மகளிர் ஆணையத்திற்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறினார். இச்சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal