சென்னை தாம்பரம் அடுத்து ஜமீன் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50), பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா (45). தம்பதியருக்கு ராஜேஷ் என்ற மகன், வசந்தி, அமுலு என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர். இதில், மகள் வசந்தி கருத்து வேறுபாடு காரணமாக சம்பத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து, பெற்றோருடன் வசித்து வந்தார். வசந்திக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

இந்நிலையில், வசந்திக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னை, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மோசஸ் (35) என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு மோசஸ் அடிக்கடி வசந்தியின் வீட்டிற்கு வந்து அவரை சந்தித்து வந்துள்ளார். இவர்களது பழக்கம் குறித்து வசந்தியின் பெற்றோர்களுக்கும் தெரியும் என கூறப்படுகிறது. இந்நிலையில், வசந்தியுடன் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்த வேண்டும் என திட்டமிட்ட மோசஸ் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் முதல் தெருவில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீடு ஒன்றை வாடகை எடுத்து தனியாக வசித்து வந்ததாகவும், மோசஸ் மது அருந்திவிட்டு அடிக்கடி வசந்தியை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், கடந்த 30ம்தேதி வசந்தி அவரது குழந்தைகளோடு மாங்காடு பகுதியில் உள்ள அவரது சகோதரி அமுலு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைதொடர்ந்து மோசஸ் வசந்தியை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வர வேண்டும் வரவில்லை என்றால் உனது பெற்றோர்களை கொன்று விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால், வசந்தி வராததால் மோசஸ் அவரது பெற்றோர்களை புது வீட்டிற்கு அழைத்துள்ளார். மோசஸ் உடன் அடிக்கடி சேர்ந்து மது அருந்தும் பழக்கத்தை கொண்டதால் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் அந்த வீட்டிற்கு சென்று மது அருந்தியதாக தெரிகிறது.

இதனைதொடர்ந்து கடந்த 1ம்தேதி, 2ம்தேதி என 2 நாட்களாக வசந்தி தனது பெற்றோர்களின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது அவர்கள் போன் எடுக்காததால் சந்தேகம் அடைந்த வசந்தி அவரது சகோதரர் ராஜேசிடம், வீட்டிற்கு சென்று தாய்-தந்தையை பார்த்துவிட்டு வரும்படி கூறியுள்ளார்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு ராஜேஷ் மோசஸ் வாடகைக்கு எடுத்திருந்த புதிய வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் தலை, கழுத்து, முகம், தொடை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியான வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் சம்பவம் குறித்து சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் கண்காணிப்பு கேமரா காட்சியில் சம்பவம் நடைபெற்ற கடந்த 30ம்தேதி இரவு மோசஸ் மற்றும் மற்றொரு நபர் என 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்று செல்வது பதிவாகியிருந்தது. இதனையடுத்து அந்த 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal