சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு உறுப்பினர்களிடம் பிரம்மாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கி தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தனர். இந்த நிலையில்தான் எடப்பாடிக்கு எதிராக, கட்சி தொண்டர்களிடம் ஓ.பி.எஸ். தரப்பு கையெழுத்து வாங்கும் முயற்சியில் இருக்கிறது!
அதிமுகவில் தனது இடத்தை தக்கவைக்க ஓ.பன்னீர்செல்வமும், கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர எடப்பாடி பழனிசாமியும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி அமர்வில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த நிலையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் எடப்பாடி பழனிச்சாமி செய்த மேல்முறையீட்டில், பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வந்ததால் மீண்டும் அதிமுகவில் ஈபிஎஸ் செல்வாக்கு அதிகரித்தது. அதே நேரத்தில் உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இரு தரப்பினருமே கட்சிக்குள் தங்களது தரப்பை வலுப்படுத்தும் திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றனர். ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையில், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. விரைவில் தேர்தலை அறிவித்து நிரந்தர பொதுச் செயலாளர் ஆகத் திட்டமிட்டுள்ளார் இபிஎஸ். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று, அதன் நகலை தேர்தல் ஆணையத்திடமும் சமர்பித்திருக்கிறது.
2,532 பொதுக்குழு உறுப்பினர்களிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு பெற்றுள்ள பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின் போடும், கொடுக்க இ.பி.எஸ். தரப்பு திட்டமிட்டிக்கிறது. இந்த உறுதிமொழிக் கடிதங்களை வைத்தே பொதுச் செயலாளர் தேர்வு அறிவிப்பையும் வெளியிட இபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் வேறொரு வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஒருங்கிணைப்பாளர் பதவியே தொடர வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளருக்கே கட்சியில் உச்சபட்ச அதிகாரம் உள்ளது என்றும் அதிமுக தொண்டர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் திட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு இறங்கியுள்ளதாம்.
முதற்கட்டமாக சுமார் 10 லட்சம் தொண்டர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெற்று அதனை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க ஓபிஎஸ் டீம் திட்டமிட்டுள்ளதாம். தொண்டர்கள் தான் அதிமுக தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உட்கட்சி சட்ட விதி.
எனவே, தலைமைப் பதவி விவகாரத்தில் பொதுக்குழுவை விட அதிகாரம் மிக்கது கட்சியின் தொண்டர்கள் தான். அதனால், தொண்டர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெறும் வேலையில் ஈடுபட இருக்கிறார்களாம்.
ஆக மொத்தத்தில் யாருக்கு அதிகாரம் என்ற போட்டியில், கட்சி நிர்வாகிகளின் மனநிலையை இருவருமே உணரவில்லை என்கிறார்கள் அம்மாவின் உண்மை விசுவாசிகள்!