அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கை ஓங்கியது.
பொதுக்குழு உறுப்பினர்களில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் கடந்த ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அன்றைய கூட்டத்திலேயே அடுத்த 3 மாதங்களுக்குள் பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் அதிகாரிகளாக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். அந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.
அதே போல் கட்சி அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. கட்சியில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வத்தால் உரிமை கோர முடியாது என்றும் அறிவித்தது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கான தடைகள் விலகியது. இதையடுத்து குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் வாரம் தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க. விதிப்படி கட்சியின் பொதுச் செயலாளரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். மேலும் 5 வருடம் தலைமை கழக நிர்வாகியாக இருந்திருக்க வேண்டும். 15 வருடமாக கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
இந்த காரணங்களால் ஓ.பன்னீர்செல்வம் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் கிடைக்காது என்றே கூறப்படுகிறது. எனவே திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
பொதுச்செயலாளர் தேர்தல் முடிந்ததும் 15 நாட்களுக்குள் பொதுக்குழுவை கூட்டி அங்கீகாரம் பெறவும் திட்டமிட்டுள்ளார்கள். இது தொடர்பாக மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டும் வேலைகள் தொடங்கிவிட்டன.