ஆறாவது திருமணம் முடிந்த, 15 நாட்களுக்குள் ஏழாவது திருமணம் செய்ய வந்த மோசடி மணப்பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் தனபால், 35. இவருக்கும், மதுரையைச் சேர்ந்த சந்தியா, 26, என்பவருக்கும், கடந்த, 7ல் திருமணம் நடந்தது.

திருமணத்தை, மதுரையைச் சேர்ந்த பாலமுருகன், 45, என்ற புரோக்கர் ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில், பெண்ணின் அக்கா, மாமா ஆகிய இருவர் மட்டும் வந்துள்ளனர். அவர்களும், புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு, 1.50 லட்சம் ரூபாய் கமிஷன் வாங்கிச் சென்றனர். தனபால், சந்தியாவுடன் புது வாழ்க்கையை துவங்கினார்.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி காலை, தனபால் எழுந்து பார்த்த போது, சந்தியாவை காணவில்லை. அவரது மொபைல்போன், ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.அவரது உறவினர்கள், புரோக்கர் பாலமுருகன் மொபைல் போன்களும், ‘ஆப்’ செய்யப்பட்டிருந்தன. வீட்டில் பீரோவில் வைத்திருந்த கல்யாண பட்டுப்புடவை, நகைகள், தான் கொண்டு வந்த துணிகளை எடுத்துக் கொண்டு சந்தியா மாயமானது தெரிய வந்தது.

இதுகுறித்து, தனபால் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணத்துக்கு பெண் பார்த்தபோது, மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி, 45, என்ற புரோக்கர் மூலம், சந்தியாவின் போட்டோ வந்துள்ளது. அதைப்பார்த்த தனபால், தன்னை ஏமாற்றியவர்களை வளைக்க திட்டமிட்டார்.

இதையடுத்து, புரோக்கர் தனலட்சுமியிடம் உறவினர்கள் மூலம், வேறு நபருக்கு திருமணம் செய்ய பேசி உள்ளார். போட்டோக்களை மட்டும் பார்த்து, போனிலேயே திருமணம் நிச்சயம் செய்து, நேற்று காலை, திருச்செங்கோட்டில் திருமணம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மணப்பெண் சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, அவரதுஉறவினர் அய்யப்பன், 37, ஆகியோர் காரில் திருச்செங்கோடு வந்தனர். காரை ஜெயவேல், 38, என்பவர் ஓட்டி வந்துள்ளார். அனைவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள். அங்கு வந்த போது, கணவர் தனபால், அவரது உறவினர்கள் இருப்பதைக் கண்டு சந்தியா அதிர்ச்சி அடைந்தார். சந்தியாவையும், அவருடன் வந்தவர்களையும் பிடித்து, பரமத்தி வேலூர் போலீசில் தனபால் உறவினர்கள் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சந்தியாவுக்கு தனபாலுடன் சேர்த்து, இதுவரை ஆறு பேருடன் திருமணம் நடந்தது தெரிய வந்தது. சந்தியா, அவரது கூட்டாளிகள், யாரையாவது திருமணம் செய்து, இரண்டு நாட்கள் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு, கிடைத்ததையும், புரோக்கர் கமிஷனையும் பெற்று கம்பி நீட்டுவதை தொழிலாக கொண்டவர்கள் என்பது விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து, சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, அய்யப்பன், ஜெயவேல் ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.ஆறாவது திருமணம் செய்த, 15 நாட்களுக்குள், ஏழாவது திருமணம் செய்து மோசடியில் ஈடுபட வந்த பெண்ணின் ‘துணிச்சலை’ பார்த்து போலீசாரே அதிர்ந்து போயினர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal