தென்காசியில் திருமணத்தன்று மணப்பெண் வேறு ஓருவருடன் ஓடியதால், காத்திருந்து அண்ணனுக்கு ஏற்பட்ட அவமானத்தால், அப்பெண்ணை தீர்த்துக் கட்டியிருக்கிறார் சகோதரர்!

தென்காசி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி மேல்முக நாடார் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகள் இசக்கிலட்சுமி (23). இவர் அம்பையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் (24) என்பவருக்கும் செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 3ம் தேதி அதே பகுதியை சேர்ந்த விஜயராஜ் மகன் ராம்குமாருடன் இசக்கிலட்சுமி மாயமானார்.

இதுகுறித்து இசக்கிமுத்து கொடுத்த புகாரின்படி, கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்தனர். இதனி டையே கடந்த 1ம் தேதி வெங்கடேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் ராம்குமாரும் இசக்கிலட்சுமியும் மதுரையில் திருமணம் செய்து கொண்டு சென்னையில் இரண்டு நாட்கள் தங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் ராம்குமாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இசக்கிலட்சுமி கடந்த 3ம் தேதி தனது தந்தை வீட்டிற்கு திரும்பினார். இதன்பிறகு பூலாங்குளத்தில் உள்ள தனது சித்தி வீட்டில் இசக்கிலட்சுமி தங்கி இருந்து வந்தார்.

கடந்த 7ம் தேதி மாலை இசக்கிலட்சுமி, கடையம் அருகே துப்பாக்குடி ஓடை பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.

இசக்கிலட்சுமியின் வீடு மற்றும் சம்பவம் நடந்த பகுதியில் காணப்பட்ட சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சம்பவத்தன்று இசக்கிலட்சுமியை பைக்கில் 2 பேர் அழைத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் வெங்கடேசின் சகோதரர் ஆனந்த்(22) மற்றும் அவரது உறவினர் சிவா (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வேறு ஒருவரை திருமணம் செய்து அவமானப்படுத்தியதால் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கைதான ஆனந்த் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- எனது சகோதரர் வெங்கடேசுக்கும் இசக்கிலட்சுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருமணத்தன்று இசக்கிலட்சுமி, வேறு ஒருவரை திருமணம் செய்து எங்களை அவமானப்படுத்திவிட்டார். அதன் பின்னரும் எனது சகோதரருடன் சேர்ந்து வாழ விரும்பி என் உதவியை நாடினார். அண்ணனுக்கு திருமணம் முடிந்த நிலையிலும் இசக்கி லட்சுமி. அவருடன் சேர்ந்து வாழ விரும்பியதால் அவரால் மீண்டும் அவமானம் ஏற்படும் என கருதி அவரை தீர்த்துக்கட்டினேன் என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம்தான் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal