அ.தி.மு.க.வில் அதிகார மோதல் வலுவடைந்திருக்கும் நிலையில் விரைவில் சசிகலா & ஓ.பி.எஸ். & சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது.

சசிகலா & ஓ.பி.எஸ். சந்திப்பு தள்ளிப்போவதற்கான காரணம் குறித்து சசிகலாவிற்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்.

‘‘அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக இருந்தது. இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அ.தி.மு.க.வில் அணைவரையும் ஒன்றாக இணைத்து அரசியல் பயணம் தொடரலாம் என சசிகலா கணக்குப் போட்டு இருந்தார்.

ஆனால், எடப்பாடி தொடுத்த வழக்கில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதனால் அணிகள் இணைய வாய்ப்பில்லை என்ற நிலையில்தான் ஓ.பி.எஸ்.ஸை சந்திப்பதை சசிகலா தவிர்த்துவிட்டார்.

காரணம், அ.தி.மு.க.வில் பிளவு பட்டு இருக்கக்கூடாது, அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால்தான், ஆளும் கட்சியான தி.மு.க.விற்கு கடும் நெருக்கடியை கொடுப்பதோடு, தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என கணக்குப் போட்டார் சசிகலா. அப்படி ஓ.பி.எஸ்.ஸை மட்டும் சசிகலா சந்தித்தால், ஏதோ, அவருக்கு மட்டும் தனது ஆதரவை தெரிவித்த மாதிரியான ஒரு பிம்பத்தை எடப்பாடி தரப்பினர் உருவாக்கி விடுவார்கள். ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரும் தனக்கு வேண்டப்பட்டவர்கள்தான் என்பதால்தான் ஓ.பி.எஸ். சந்திப்பை சசிகலா தற்போதைக்கு தவிர்த்திருக்கிறார்’’ என்றவர்களிடம். ஓ.பி.எஸ்.ஸும் தனியாக அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டாரே…? என்று கேட்டபோது,

‘‘ஆமாம். தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஓ.பன்னீர்செல்வமே கூறியிருக்கிறார். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சி போலவே செயல்பட்டு வருகிறார். குறிப்பாக அமைச்சர்கள் மீதான விமர்சனம், ஊழல் குற்றச்சாட்டுகள் என நாளுக்கு நாள் திமுகவுக்கு எதிரான அவரது தாக்குதல்கள் அதிகரித்து வருவது திமுக என்ற மட்டுமல்ல அதிமுகவினரையே கடுகடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் இரு தலைவர்களிடையேயான அதிகார மோதல் தான் காரணம். இப்படி நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில், பிரச்சினை தற்போதைக்கு முடிவடைவதாகத் தெரியவில்லை. காரணம் ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அடுத்தடுத்து இந்த விவகாரம் சட்டப் போராட்டங்களை தொடரும் என்றே கூறப்படுகிறது அதே நேரத்தில் கட்சி நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க எடப்பாடி பழனிச்சாமியின் தீவிரம் காட்டி வருகிறார்.

ஒருபுறம் சட்டப் போராட்டம் மறுபுறம் தொண்டர்களுடன் சந்திப்பு என எடப்பாடி பழனிச்சாமியின் அணுகுதல் சற்று வித்தியாசமாகவே இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் போல ஆவேசமாக பேசாமல் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே செய்தியாளர்களை சந்திக்கிறார். குறிப்பாக தொண்டர்களை சந்திப்பதில் தான் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது இதற்காகவே மூத்த முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டு தமிழகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் சேர்ந்து செயல்படுவார் என்ற திட்டமும் கை கூடுவது போல தெரியவில்லை. இன்று போய் நாளை என்ற அடிப்படையிலேயே அவர்களது சந்திப்பு குறித்த செய்திகள் இருக்கிறது. இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தனியே சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை அவரே உறுதிப்படுத்தி இருக்கிறார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் இருக்கும் எனக் கூறியிருந்தார். இதன் காரணமாக சசிகலா பன்னீர்செல்வம் சந்திப்பு தள்ளிப் போகலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு தன்னை கட்சியிலிருந்து வெளியேற்றியதால் கடும் அதிருப்தியில் இருக்கும் ஓ பன்னீர்செல்வத்தை தற்போது சசிகலா தரப்பும் சந்திக்காமல் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது’’ என்றவர்கள் அடுத்து சொன்னதுதான் அதிர்ச்சி ரகம்!

அதாவது, ‘‘எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பினருக்கு தலைக்கு மேல் கத்தியாக வழக்குகள் தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வழக்குகள் அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தினால், அவரிடம் இருப்பவர்கள் அனைவரும் சசிகலாவிடம் வருவார்கள். அதன் பிறகுதான் ஒன்று பட்ட அ.தி.மு.க.வாக உருவாகும். இதெல்லாம் காலத்தின் கையிலும், சட்டத்தின் பிடியிலும்தான் இருக்கிறது’’ என்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal