மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. அதேநேரத்தில் போயஸ் கார்டன் இல்லத்துக்கு உரிமை கொண்டாடி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் ஜெயலலிதாவின் வீட்டை சசிகலா மறைமுகமாக வாங்க டிரஸ்ட் அமைத்துள்ளதாக உறுதி இல்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஜெயலலிதாவின் வீடு யார் கைக்கு போகும் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கு ஜெ.தீபா முற்றுப்புள்ளி வைத்து ஜெயலலிதாவின் வீட்டில் தான் குடியேற முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக இணையதளத்தில் ஆடியோ ஒன்றை ஜெ.தீபா வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் தீபா கூறி இருப்பதாவது:- போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எங்களின் பூர்வீக சொத்தாகும். எனது பாட்டி சந்தியா மறைவுக்கு பின்னர் எனது அத்தை ஜெயலலிதாவுக்கு உயில் வழியாக கொடுக்கப்பட்டது. எனது தந்தை ஜெயகுமாரும், தாயார் விஜயலட்சுமியும் அங்குதான் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். அந்த வீட்டில் தான் நானும் பிறந்தேன். பின்னர் மிகச்சிறிய கருத்து வேறுபாடுகள் காரணமாக எனது தந்தையும், தாயாரும் அந்த வீட்டைவிட்டு வெளியே வந்தனர். அதன்பிறகு தி.நகரில் உள்ள மற்றொரு பூர்வீக இல்லத்தில் வசித்து வந்தோம்.
ஜெயலலிதா அழைக்கும் போதெல்லாம் போயஸ் கார்டன் சென்று வருவோம். ஒரு காலக்கட்டத்தில் அவர் கேட்டுக்கொண்டதால் அங்கேயே இருந்து வந்தோம். பின்னர் அவர் அரசியலில் ஈடுபட்ட பிறகு அந்த வீட்டில் இருந்து முழுமையாக வெளியே வந்து விட்டோம். இந்த பூர்வீக சொத்தை கோர்ட்டு வழியாக நானும், தீபக்கும் திரும்ப பெற்றுள்ளோம்.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்ததால் அவருடன் பயணித்தவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர் இருந்திருக்கலாம். அப்படி உள்ள எல்லோருமே அவருடைய சொத்துக்கு உரிமை கோர முடியாது. குடும்ப அந்தஸ்தை பெறவும் முடியாது. குடும்ப சொத்துக்களிலும் உரிமை கோர முடியாது. ஜெயலலிதாவுடன் பயணித்தோம் என்று சொல்லும் சசிகலா குடும்பத்தினருக்கும் இது பொருத்தமானது.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் விற்பனைக்கு வரும் என்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். அந்த வதந்திகளை நான் கடுமையாக மறுக்கிறேன். அந்த வீடு விற்பனைக்கு என்று நாங்கள் யாரும் சொல்லவும் இல்லை. யாரையும் அணுகவும் இல்லை. யாரும் எங்களை அணுகவும் இல்லை.
வேதா நிலையத்தை பொறுத்தவரை அதை பராமரிக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. அதை நான் கண்ணும் கருத்துமாக செய்து கொண்டு இருக்கிறேன். மிக விரைவில் அங்கு குடியேறும் எண்ணம் எனக்கு இருக்கிறது. எனவே இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.