வரும் தீபாவளி தினத்தன்று ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும், முதல்கட்டமாக டில்லி, மும்பை, சென்னை மற்றும் கோல்கட்டா ஆகிய மெட்ரோ நகரங்கள் உட்பட பல முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்த உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்.ஐ.எல்) நிறுவனத்தின் 45வது ஆண்டு கூட்டம் இன்று (ஆக.,29) நடந்தது. ரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் மற்றும் எதிர்கால முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த நிதியாண்டு மற்றும் வருங்காலத்திற்கான திட்டங்களை முகேஷ் அம்பானி எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ரிலையன்ஸ் ஜியோ உலகின் அதிவேக 5ஜி சேவை திட்டத்தை தயாரித்துள்ளது.

வரும் தீபாவளிக்கு, டில்லி, மும்பை, சென்னை மற்றும் கோல்கட்டா ஆகிய மெட்ரோ நகரங்கள் உட்பட பல முக்கிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவோம். அடுத்து ஆண்டு (2023) டிசம்பருக்குள், இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் மூலை முடுக்கெல்லாம் ஜியோ 5ஜி சேவையை வழங்குவோம். ஜியோ 5ஜி சேவை அனைவரையும், அனைத்து இடங்களையும் மிக உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் இணைக்கும். சீனா மற்றும் அமெரிக்காவை விட இந்தியாவை தரவு பொருளாதாரமாக மாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal