‘அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்’ என சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது உறுதியாகி வருகிறது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களாக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் பொது முடக்கம் ஏற்பட்டு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டன. வேலையில்லாமல் வருவாய் இழப்பு ஏற்பட்டன. வேலையின்றி வீடுகளில் முடங்கிய கூலி தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் தங்களின் குழந்தைகளை தொடர்ந்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக வசதிகள் அதிகரித்து விட்டதாகவும் பெரும்பாலான ஏழை எளிய நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 20 லட்சம் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 72 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும், மேலும் வருங்காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.