அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இ.பி.எஸ். வைத்த இரண்டு முக்கிய வாதங்கள் ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்!

உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழக்கை விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை எதையும் விதிக்க போவதில்லை.இதனால் இன்றே இரண்டு தரப்பும் இறுதி வாதங்களை வைக்கும். அடுத்த வாரம் பெரும்பாலும் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று சில பாரம்பரிய வாதங்களை வைத்தது. அவருக்கு 1 மணி நேரம் வாதம் வைக்க நேரம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் தரப்பு வைத்த வாதத்தில், உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் நிவாரணம் பெறலாம் என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது. ஆனால் உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லாது என்று கூறியுள்ளார். இது ஓபிஎஸ் வைக்காத கோரிக்கை.

மெஜாரிட்டி பொதுக்குழு உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகளை கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் போன்ற கடந்த வாதங்களில் வைக்கப்பட்ட வாதங்களை எடப்பாடி பழனிசாமி மீண்டும் இந்த வழக்கில் வைத்தார். இதெல்லாம் பழைய வாதங்கள் என்றாலும் இன்று எடப்பாடி பழனிசாமி 2 முக்கியமான புதிய வாதங்களை வைத்தார். இதனால் இந்த வழக்கில் அவருக்கு சாதகமாக சூழ்நிலை திரும்புமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்த வழக்கில் கடந்த தீர்ப்பிற்கு முக்கிய காரணியாக இருந்தது பொதுக்குழு நோட்டீஸ். அதாவது பொதுக்குழு நடக்கும் என்று முறையாக நோட்டீஸ் அளிக்கப்படவில்லை என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது. நீதிபதி ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கவும் இந்த பாயிண்ட் முக்கிய காரணமாக இருந்தது. எப்படி நோட்டீஸ் கொடுக்காமல் பொதுக்குழுவை கூட்டினீர்கள் என்பதுதான் வழக்கில் கடந்த முறை திருப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக இன்று புதிய வாதத்தை எடப்பாடி தரப்பு வைத்தது.

அதன்படி அதிமுக பொதுக்குழுவில் நோட்டீஸ் கொடுக்கப்படாதது பற்றி பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டவில்லை. பெரும்பாலான உறுப்பினர்கள் ஏன் நோட்டீஸ் கொடுக்கவில்லை என்று முறையிடவில்லை. மனுதாரரை தவிர வேறு யாரும் நோட்டீஸ் விவகாரம் பற்றி கேள்வி கேட்கவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுக்கப்படாமல் பொதுக்குழுவிற்கு தேதி அறிவிப்பு அடிப்படையில் வந்துள்ளனர். அதனால் நோட்டீஸ் கொடுக்கப்படாததை தவறு என்று கருத முடியாது என்று வாதம் வைத்துள்ளது. கடந்த முறை வைக்காத வாதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக செயல்படும் நபர் அடிப்படை உறுப்பினரே கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி வாதம் வைத்து இருக்கிறார். அதாவது ஓபிஎஸ் பொதுக்குழுவிற்கு எதிராக செயல்பட்டால் அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி வாதம் வைத்து இருக்கிறார். இதன் மூலம் ஜூலை 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் இருந்து பாதையில் வெளியேறியதால், அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கலாம் என்று பொருள்படும் வகையில்.. பொதுக்குழுவை அடிப்படை உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறி உள்ளார்.

நாங்கள் பொதுக்குழுவில் இருந்து வெளியேறிவிட்டோம் என்று ஓபிஎஸ் வைத்த வாதத்தையே அவருக்கு எதிராக எடப்பாடி தரப்பு திருப்பி உள்ளது. இது ஓபிஎஸ்ஸின் அடிப்படை உறுப்பினர் பதவியிலேயே கை வைக்கும் வாதம் ஆகும். இந்த இரண்டு வாதங்களையும் கடந்த வழக்கு விசாரணையின் போது எடப்பாடி பழனிச்சாமி வைக்கவில்லை. அந்த இரண்டு பாயிண்டுகளை இந்த முறை எடப்பாடி வைத்து இருக்கிறார். முக்கியமாக நோட்டீஸ் விவகாரம் பற்றி எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த வாதம் வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal