தி.மு.க.வில் விரைவில் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாவது உறுதி என அண்ணாமலை தெரிவித்திருப்பதுதான், தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சின்னப்பா பூங்காவில் பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “திமுக அரசு தாங்கள் சமூக நீதி அரசு திராவிட மாடல் அரசு என்று கூறுகிறது. ஆனால், சுதந்திர தினத்தில் கூட 20 தலித் ஊராட்சி தலைவர்களால் தேசியக் கொடியை ஏற்ற முடியவில்லை. இந்த திமுக அரசில் ஸ்டாலின் குடும்பம் வளர்ந்துள்ளதே தவிர மக்கள் யாரும் வளர்ச்சி அடையவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகத்தை திமுக நடத்தி வருகிறது.

அப்படிதான் சமீபத்தில் நரிக்குறவர்கள் இல்லத்திற்குச் சென்ற முதல்வர், அவர்களுக்கு உதவி செய்வதாகச் சொல்லி நிதி அளித்தார். அரசு அளித்த நிதி காசோலையாக வழங்கப்பட்டது. ஆனால், அந்தப் பெண்ணுக்கு இன்னும் நிதி கிடைக்கவில்லை. காசோலையும் வங்கியில் இருந்து திரும்பி வந்து விட்டதாக அஸ்வினி என்ற அந்த நரிக்குறவர் பெண் துணிச்சலாக இப்போது வெளியே கூறியுள்ளார். இப்படி தொடர்ச்சியாக நாடகங்களைத் தான் திமுக நடத்தி வருகிறது. செல்லாத காசோலையைக் கொடுத்து, அஸ்விணிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நரிக்குறவ சமுதாயத்திற்கு முதல்வர் துரோகம் செய்துள்ளார்.

மிக விரைவில் நரிக்குறவர் சமுதாயத்தினரை எஸ்.டி பிரிவில் சீழ் கொண்டு வரும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட உள்ளது. ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள் திமுக ஆட்சியில் ஊழல் செய்து வருகின்றனர். இதை நாங்கள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறது. இப்போது லஞ்ச ஒழிப்புத் துறை உங்கள் கையில் இருப்பதால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்க வேண்டாம். மிக விரைவில் காட்சிகள் மாறும். ஊழல் திமுக அமைச்சர்கள் சிறைக்குச் செல்வது உறுதி. யார் ஊழல் செய்தாலும் சிறைக்குச் செல்வது உறுதி.

திமுக அரசு பாஜக மீது கடுமையான அடக்குமுறைகளை எடுத்து வருகிறது. ஆனால், இதற்கெல்லாம் பாஜக பயப்படாது. தமிழகத்தில் ஆளும் கட்சியாக பாஜக வரப்போவது உறுதி. திமுக நிர்வாகிகள் அனைவரும் நமது கண் முன்னே கனிம வளங்களைக் கொள்ளையடிக்கிறார்கள். இங்கு டாஸ்மாக் கடைகளை மூட திமுக தயாராக இல்லை. இதன் மூலம் மாநிலத்தைக் குடிகார மாநிலமாக திமுக மாற்றுகிறது. இதில் இருந்து தான் அவர்கள் பணத்தை ஈட்டுகின்றனர்.

அப்படியிருக்கும் போது, தமிழகம் போதை இல்லாத மாநிலமாக எப்படி மாறும். போதை கலாசாரத்தால் மாநிலத்தில் கொலை, கொள்ளை, வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. இதையெல்லாம் மறைக்கவே, பாஜக மீது தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். நாட்டில் எந்தவொரு முதல்வரும் இதுவரை திரைப்பட விழாவுக்கு எல்லாம் சென்றது இல்லை. ஆனால், முதல்வர் ஸ்டாலின் விரைவில் டிரைலர் வெளியீட்டு விழாவிற்குச் செல்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. திரைத் துறையைக் கூட அவர்கள் தான் ஆக்கிரமிக்கிறார்கள்.

இப்படி இருக்கும் போது, சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் திடீரென பாஜக உடன் கூட்டணியோ உறவோ இல்லை எனக் கூறி இருக்கிறார். ஏன் இப்படி திடீரென கூற வேண்டும். அவர்கள் மனதில் திடீரென பயம் வந்துவிட்டது. நாட்டில் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரு மதத்தை மட்டும் இழிவுபடுத்தி வருகிறது. இதைத் தான் நாங்கள் எதிர்த்துப் பேசி வருகிறோம். இதனால் நாடு முழுவதும் மக்கள் பாஜகவுக்கு வாக்கு அளிக்கின்றனர். இதன் காரணமாகவே முதல்வருக்கு அச்சம் வந்துவிட்டது. பாஜக உடன் கூட்டணி சேர திமுகவுக்கு எந்தவொரு அருகதையும் இல்லை.

நான் அரசியல் வந்ததற்கே திமுக தான் காரணம்! மக்கள் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர். திமுகவில் விரைவில் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாவது உறுதி” என்று அவர் தெரிவித்தார்.

அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கும்போது, நரிக்குறவர் பெண்கள் அவருக்குப் பாசி மாலைகளை அணிவித்தது அனைவரையும் கவனித்த வைத்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal