சின்னம்மா(சசிகலா)வை சந்தித்து பேசுவது குறித்து வைத்திலிங்கம் மற்றும் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ்.. அ.தி.மு.க.வின் தொண்டர்களும் சந்திப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விரைவில் சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததை அடுத்து சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் புறப்பட்டுச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வைத்து ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான், ஓ.ராஜா உள்ளிட்டோர் சசிகலாவுடனான சந்திப்பை இனியும் தாமதப் படுத்த வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தியுள்ளார்களாம்.

அன்புச் சகோதரர் என மிகவும் மரியாதையாக எடப்பாடி பழனிசாமியை நீங்கள் குறிப்பிட்டும் அவர் அரசியல் நாகரீகம் தெரியாமல் உங்களை உதாசீனப்படுத்தி இருக்கிறார், இதனால் சசிகலாவை நீங்கள் சந்திப்பதன் மூலம் எடப்பாடி தரப்புக்கு நாம் அதிர்ச்சி கொடுக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு மனதில் தோன்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். தற்போதைய சூழலில் சசிகலாவுடனான சந்திப்பை தவிர்ப்பது நல்லதல்ல எனவும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, ஓபிஎஸ் -சசிகலா சந்திப்பை எப்படியாவது நிகழ்த்தி விட வேண்டும் என முழு முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். ஆனால் அவசரம் வேண்டாம், என ஓபிஎஸ் தான் தனது சகோதரரை அமைதிப்படுத்தி வைத்திருக்கிறாராம். இதனிடையே நேற்று தேனி புறப்படுவதற்கு முன்னர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை சின்னம்மா என்று குறிப்பிட்டு இணைப்பு பற்றி பேசியது கவனிக்கத்தக்கது.

மேலும் சசிகலா சந்திப்பு… எடப்பாடியின் வீம்பு… பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.

‘‘சார், விட்டுக்கொடுத்தோர் கெட்டுப்போவதில்லை என்பார்கள். எல்லாவற்றையும் எடப்பாடிக்கு ஓ-.பி.எஸ். விட்டுக்கொடுத்தார். அதனால்தான் உயர்நீதிமன்றத்தில் அவருக்கு சாதமாக தீர்ப்பு வந்திருக்கிறது.

அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என தொண்டர்கள் நினைத்தாலும், எடப்பாடியார் ‘வாய்ப்பே இல்லை’ என பிடிவாதமாக இருக்கிறார். காரணம், பதவி ஆசைதான். எனவே, இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். விரைவில் அ.தி.மு.க.விற்கு விடிவுகாலம் பிறக்கம்’’ என்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal