அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து ஒபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்து நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின் நியமனம் செல்லாது, ஜூன் 23 க்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டுமென கூறியிருந்தார்.

இந்த தீர்ப்பால் ஓபிஎஸ் அணியினர் உற்சாகம் அடைந்தனர். அதிர்ச்சி அடைந்த இபிஎஸ் அணியினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் முன்பு ஆஜராகி, மேல்முறையீட்டு வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

மேல்முறையீட்டு மனு மதியத்திற்குள் முறையாக எண்ணிடப்பட்டுவிட்டால், திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியின் கூடுதல் மனு வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 22ஆம் தேதி) அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனுவில் கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும், பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் உள்ள தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கட்சியின் நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க எந்த அதிகாரமும் இல்லை. இந்த தீர்ப்பு கட்சி செயல்பாட்டில் மட்டுமல்லாமல் பெரும்பான்மை உறுப்பினர்களில் விருப்பத்தில் தலையிடுவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு வழக்கில் தன் தரப்பு வாதத்தை கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கூடிய கேவியட் மனு ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal