கோவை மாநகராட்சி ஆய்வு மாளிகையில் தீ விபத்து ஏற்பட்டது; பழைய கோப்புகள் எரிந்தது தொடர்பாக, துறை ரீதியான விசாரணைக்கு, கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டிருக்கிறார்

கோவை மாநகராட்சி ஆய்வு மாளிகை, மத்திய மண்டல அலுவலகம் அருகே இருக்கிறது. ஆய்வுக்கு வரும் உயரதிகாரிகள், இங்கு தங்காமல், அரசு விருந்தினர் மாளிகை அல்லது நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்கின்றனர்.

அதனால், ஆய்வு மாளிகை முதல் தளத்தில் பழைய கோப்புகள், கீழ்தளத்தில் பிளீச்சிங் பவுடர்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. பழைய கோப்புகள் மற்றும் பிளீச்சிங் பவுடரில் தீ பரவியது. தீயை அணைக்க சென்ற தீயணைப்பு அலுவலர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக, மாநகராட்சி மத்திய மண்டல அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கவனத்துக்கு சென்றதும், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதன் பின், தீ விபத்து நடந்தது தொடர்பாக கோப்பு தயார் செய்யப்பட்டு, பிரதான அலுவலகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறை விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன.

இச்சூழலில் தீ விபத்து ஏற்பட்டு, பழைய கோப்புகள் எரிந்திருப்பது; அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.தீயணைப்பு துறையினரிடம் கேட்டபோது, ‘மாநகராட்சி அலுவலகத்தில் பழைய காகிதங்கள் கட்டு கட்டாக இருந்தன. கோப்புகளா என எங்களுக்கு தெரியாது’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal