முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் நிழலாக வலம் வரும் ஆத்தூர் இளங்கோவன் விஜிலென்ஸ் வளையத்தில் சிக்கியிருக்கிறார். விரைவில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேற காத்திருக்கிறது!
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நண்பரான இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி 9 மாதங்களை கடந்த நிலையில் தற்போது ஹார்டு டிஸ்க்கில் உள்ள விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழக மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பராக இருப்பவர் இளங்கோவன். இவர் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, மந்திரிகளால் முடியாத காரியங்களை கூட முடித்து கொடுத்தவர் இளங்கோவன்.இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம்தேதி இளங்கோவனின் வீடு, மகனின் கல்வி நிறுவனங்கள், நெருங்கிய நண்பர்கள், பினாமிகள் என மொத்தம் 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 41 கிலோ தங்க நகைகள், 280 கிலோ வெள்ளிபொருட்கள், ரூ.34.28 லட்சம் பணம், ரூ.70 கோடியில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் முதலீடு, வெளிநாட்டு பணம் ரூ.5.5 லட்சம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையில் ஹார்டு டிஸ்க்கும் எடுக்கப்பட்டது. அதில் தொழில் தொடர்பான விவரங்கள், முதலீடுகள், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த ஹார்டு டிஸ்க்கும் நீதிமன்றம் மூலமாக சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த டிஸ்க்கில் இருக்கும் தகவல்களை இன்னொரு டிஸ்க்குக்கு காப்பி செய்ய வேண்டுமானால் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று, நீதிமன்றம் மூலம் வழங்கப்படும் டிஸ்க்கில் தான் காப்பி செய்ய வேண்டும்.அதன்படி சென்னைக்கு அனுப்பப்பட்ட டிஸ்க்குகள் காப்பி செய்து சேலம் நீதிமன்றத்தில் அண்மையில் ஒப்படைக்கப் பட்டது. இதனை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பெற்றுச் சென்றுள்ளனர். இதனை வைத்து அதிலுள்ள விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம்தேதி சோதனை நடத்தினர்.
9 மாதங்களை கடந்த பிறகும் அவர் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. தற்போது சோதனையில் இருந்து எடுக்கப்பட்ட ஹார்டு டிஸ்க்குள் ஆய்வுக்கு சென்று வந்துள்ளதையடுத்து இளங்கோவனிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், ‘‘இளங்கோவன் தொடர்பாக 36 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதால் ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்பட்டு வந்தது. தற்போது ஹார்டு டிஸ்க்கில் இருந்த விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அவரிடம் விசாரணை நடத்தப்படும்,’’ என்றனர். இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.