அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து முடிந்திருக்கிறது. அநேகமாக தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்பிருக்கிறது.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது போன்ற பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பொதுக்குழு தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணை நடத்த அறிவுறுத்தியது. இதன்படி வழக்கு விசாரணை கடந்த வாரம் 2 நாட்கள் நடைபெற்றது. கடந்த 11-ந்தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இருதரப்பு வக்கீல்களும் காரசாரமாக தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். இதனை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை வழக்கு விசாரணை பட்டியலில் பொதுக்குழு தொடர்பான வழக்கு இடம்பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் திக், திக் மனநிலையுடன் காத்திருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லுமா? என்பது நாளை தெரியவரும் என்பதில் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சட்ட போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். கடந்த மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி இருந்தார். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கிலேயே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி மாற்றம் செய்யப்பட்டு நாளை தீர்ப்பு வெளியாக இருக்கிறது. இதனால் அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொதுக்குழுவில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவேண்டும் என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இரு தரப்பும் கோவில்களில் யாகத்தில் ஈடுபட்டனர். அந்த யாகம் யாருக்கு யோகத்தைக் கொடுக்கிறது என்பதைப் பார்ப்போம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal