தர்மபுரியில் பதினேழு வயது மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவிட்டு, பிறகு அந்த வாலிபர் ஏமாற்றியதால், அந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் சமீப காலங்களாக மாணவ- மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் துயர நிகழ்வுகள் அதிகரித்து உள்ளது. இதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மாணவ- மாணவிகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கவுன்சிலிங் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தர்மபுரியில் மீண்டும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள துயரம் அரங்கேறி உள்ளது. தர்மபுரி அருகே அக்கமனஅள்ளி பகுதியில் உள்ள சின்னமாட்டுகடை கிராமத்தைச் சேர்ந்தவரின் 17 வயது மகள், சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த ஆண்டு தான் பிளஸ்2 முடித்து இருந்தார். இந்நிலையில், இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.
இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்ட ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் அவரை மீட்டனர். அவர் உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே உயிரிழக்கும் முன்பு மாணவி அளித்த மரண வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அதாவது, அந்த சிறுமி கடந்த இரு ஆண்டுகளாகவே அக்கமன அள்ளி பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். திருணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி முனிரத்தினம் பல முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இருப்பினும், இப்போது ஏதேதோ காரணம் சொல்லி திருமணம் செய்ய மறுப்பதாகவும் அந்த சிறுமி தெரிவித்தார். முனிரத்தினம் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் இதனால் மனமுடைந்து தற்கொலை செய்ய முயன்றதாகவும் அந்த மாணவி தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக இது தொடர்பாக மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் 26 வயதான முனிரத்தினம் என்பவரைக் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.