‘கல்வித்துறையில் பாராட்டுக்களும், விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. வாங்கும் ஊதியத்திற்காக வேலை செய்யாமல், மாற்றத்தை நோக்கி கல்வி அதிகாரிகள் செயல்படவேண்டும்’ என அதிகாரிகளை எச்சரித்திருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சார்நத பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன் உட்பட கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘‘தற்போது இருக்கும் சூழ்நிலையில் பள்ளி கல்வி துறைக்கு மக்கள் மற்றும் ஊடக்கத்தில் பாராட்டும் மற்றும் விமர்சனங்கள் இரண்டும் வந்து கொண்டுதான் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள சிஇஓ, டிஇஓ ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று அடிக்கடி ஆய்வுகள் நடத்த வேண்டும்.

தொடர்ந்து, பள்ளிகளில் நடத்தப்படும் ஆய்வின் போது சிஇஓ, தலைமை ஆசிரியர்களை சிலர் கோபத்துடன் கேள்விகள் கேட்பார்கள். அது தனிப்பட்ட பிரச்னையாக கருதக்கூடாது. பள்ளியின் வளர்ச்சிக்காக என்று கருத வேண்டும். சிஇஓ-க்கள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களை அழைத்து கற்றல் திறன் குறித்து விவாதிக்க வேண்டும். கற்றல் திறனை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல், பள்ளி கல்வித்துறை நல்ல பெயர் எடுத்த நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பள்ளி கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. ஒரு பிரச்னை ஏற்பட்டால் 24 மணி நேரத்தில் என்ன நடந்தது என்று கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும். அதுமட்டுமல்லால் பிரச்னைகள் குறித்து முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.

மூன்று மாவட்டங்களிலும் பின்தங்கிய மாணவர்கள் அதிகம் உள்ள மாவட்டம் கடலூர் மாவட்டம் தான். அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும்தான் பள்ளி சிறப்பாக செயல்படுவதாக பேசப்பட்டு வரும் நிலையை மாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஊதியத்திற்காக வேலை செய்யாமல், தாங்கள் இருக்கும் துறையில் கல்வியில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாட்டையை சுழற்றிய பிறகுதான், கல்வி அதிகாரிகள் பம்பரமாக சுற்றி சுற்றி ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal