இந்தியாவின் சிறந்த முதல்வர் யார் என்பது குறித்து இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்திலும், அசாம் முதல்வர் ஹிமாத் பிஸ்வாஸ் ஷர்மா இரண்டாமிடத்திலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்!
பிரபல செய்தி நிறுவனமான இந்தியா டுடே ‘மூட் ஆப் தி நேஷன்’ என்ற பெயரில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்கள் மத்தியில் கருத்துக்கணிப்புகளை நடத்துவது வழக்கம். பல்வேறு விதமான கேள்விகளை பொதுமக்களிடம் கேட்டு கருத்து கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே வெளியிடும். அந்தவகையில், இந்த முறை இந்தியா டுடே நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தியா டுடே நடத்திய ‘செல்வாக்கு பெற்ற முதலமைச்சர்’ தொடர்பான கருத்துக்கணிப்பில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 78 சதவீத மக்கள் ஆதரவுடன் நம்பர் 1 முதல்வராக விளங்குகிறார். பாஜகவை சார்ந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 63% மக்கள் ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அதைத் தொடர்ந்து 61 சதவீத மக்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா டுடேவால் வெளியிடப்பட்ட சர்வே முடிவுகளின்படி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 42% சதவிகித மக்கள் ஆதரவுடன் முதலிடத்தில் இருந்தார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 38% சதவிகித மக்கள் ஆதரவுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார். கேரளா முதல்வர் பினராயி விஜயன் 35% சதவிகித மக்கள் ஆதரவுடன் மூன்றாம் இடத்தில் இருந்தார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 29% சதவிகித மக்கள் ஆதரவுடன் ஆறாம் இடத்தில் இருந்தார்.
இதனைப் போலவே லோக்சபா தேர்தல் இப்போது நடந்தால் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு 53 சதவீதம் பேர் மோடிக்கும் ஒன்பது சதவீதம் பேர் மட்டுமே ராகுல் காந்திக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள முதல்வருடன் ஒப்பிடுகையில் முதல்வர் ஸ்டாலின் மூன்றாம் இடம் பிடித்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.