பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியை பலவீனப்படுத்தும் நிலையில் பா.ஜ.க. தீவிரமாக இறங்கியதால், கட்சியைப் காப்பாற்ற பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்து, இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்!

பீகார் மாநிலத்தில் கடந்த 2020இல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி அதிகபட்சமாக 75 இடங்களைப் பெற்றது.இருப்பினும் பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களை எந்தவொரு கட்சியாலும் பெற முடியவில்லை. இதனால் அங்கு பாஜக உடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தார் நிதிஷ் குமார்.

அந்தத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் மட்டுமே வென்று இருந்தது. அதேநேரம் பாஜக அப்படியே 75 இடங்களை அள்ளியது. இதனால் கூட்டணி அரசில் பாஜக தலைவர்களில் யாரேனும் ஒருவர் தான் முதல்வராக இருப்பார் எனக் கருதப்பட்டது. இருப்பினும், நிதிஷ்குமாரே 5 ஆண்டுகள் முதல்வராகத் தொடர்வார் என்று பாஜக அறிவித்து. அதேநேரம் கடந்த இரு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருந்தே வந்தது.

அதிலும் கடந்த சில மாதங்களாக இந்த மோதல் தீவிரமடைந்து இருந்தது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற முக்கிய கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட விரிசில் தொடர்ந்து அதிகரித்தே வந்தது. இந்தச் சூழலில் அவர் பாஜக உடனான கூட்டணியை இன்று முறித்துக் கொண்டுள்ளார். ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் அவர் மீண்டும் ஆட்சியை அமைக்க உள்ளார்.

அதேநேரம் பாஜக உடனான கூட்டணியை முறித்தால் அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிதிஷ் குமாருக்கு நன்கு தெரியும். தேர்தலில் கடுமையாக எதிர்த்தவர்கள் உடனேயே கூட்டணி வைத்தால் மக்களிடமும் இது குறித்து விளக்க வேண்டி இருக்கும். அதற்கான திட்டத்தையும் நிதிஷ் குமார் ரெடியாகவே வைத்துள்ளதாக அவருக்கு நெருக்கமானோர் கூறுகின்றனர். பாஜகவை அமல்படுத்த நிதிஷ் குமார் பக்காவாக திட்டம் வைத்துள்ளதாகக் கூறுகின்றனர்.

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமாரிடம் ஆறுக்கும் மேற்பட்ட ஆடியோக்கள் உள்ளதாம். பணம், பதவி உள்ளிட்டவை தருவதாகக் கூறி ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர் ஒருவருக்கு அழைப்பு சென்றுள்ளது. நிதஷ்குமாருக்கு எதிராகக் கலகம் செய்தால் இதையெல்லாம் தருவோம் என்று கூறி உள்ளனர். இந்த ஆடியோக்கள் அத்தனையும் அவரிடம் உள்ளதாம். அதேநேரம் வெளிப்படையாக எந்தக் கட்சி இதைக் கொடுக்க முன்வந்தது எனக் கூற மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜீவ் ரஞ்சன் சிங் கூறுகையில், “கடந்த சட்டசபைத் தேர்தலிலேயே ​​சிராக்கை இறக்கிவிட்டு, நிதிஷ் குமாரை பலவீனப்படுத்தினார்கள். அதனால் தான் எங்களால் 43 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இப்போது இன்னொரு குறுக்கு வழியைப் பயன்படுத்தி ஐக்கிய ஜனதா தள கட்சியை காலி செய்ய அவர்கள் திட்டமிடுகிறார்கள். இந்த முறை அது பலன் தராது” என்றார்.

மாற்றுக் கட்சி ஒன்று தங்களுக்குக் காசு மற்றும் அமைச்சர் பதவி கொடுக்க முன்வந்ததை அந்த சட்டசபை உறுப்பினர்களே மொபைலில் ரெக்கார்ட் செய்துள்ளனர். இப்படி மொத்தம் 6 ரெக்கார்டிங் உள்ளதாம். கூட்டணியை முறித்துக் கொண்டு ஆர்ஜேடி, காங்கிரஸ் உடன் கைகோர்த்து உள்ள நிலையில், எதாவது பிரச்சினை ஏற்பட்டால் நிதிஷ் குமார் இந்த ஆடியோக்களை வெளியிடுவார் என்றும் தலைமைக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மேலும் கூறுகையில், “எதாவது பிரச்சினை வரும்போது, அவர் அந்தக் கட்சியை அம்பலப்படுத்த ஆடியோவை கட்டாயம் வெளியிடுவார். எதற்காகக் கூட்டணியை மாற்றினார் என்பதை நாட்டிற்கு விளக்குவார். சொந்த கட்சியினரைக் கொண்டு கலகம் செய்யத் தூண்டிவிடுவதாலேயே அவர் கூட்டணியை முறிக்க முடிவு செய்தார். கட்சியைக் காப்பாற்றவே அவர் இந்த முடிவை எடுத்தார்” என்றார்.

தமிழகத்திலும் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தி, பா.ஜ.க. காலூண்ற முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நிதிஷ் எடுத்த முடிவு தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal