அ.தி.மு.க.வில் எடப்பாடி தரப்பில் இருக்கும் ஒன்றியச் செயலாளர்கள் ஓ.பி.எஸ். பக்கம் தாவி வருகிறார்கள். அதே சமயம் பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் ஓ.பி.எஸ். தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அந்தநல்லூர் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் சமீபத்தில் கு.ப.கிருஷ்ணனை சந்தித்து, ஓ.பி.எஸ். தரப்பில் ஐக்கிய மானார். அதே போல், டெல்டா, கொங்கு பகுதிகளில் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் ஓ.பி.எஸ். தரப்பிடம் தாவுவதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கின்றனர்.
இது பற்றி ஓ.பி.எஸ். தரப்பில் நெருக்கமாக இருக்கும் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
‘‘எடப்பாடி பழனிச்சாமி , ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே தேர்தல் ஆணையம் ரிசர்வ் வங்கி ஆகியவற்றிற்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் இதுவரை எவ்வித முடிவுகளையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது ஓபிஎஸ் தரப்பை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் தான் தேனி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக நிர்வாகிகள் பலர் ரகசியமாக சந்தித்ததாகவும் அவர்கள் மேலும் பல பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர் ஓபிஎஸ் தரப்பில் இணைய இருக்கின்றனர்.
ஏற்கனவே ஓபிஎஸ் ஆதரவு மாவட்டங்களை எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக உள்ளவர்களையும் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு நிர்வாகிகளை ஒருங்கிணைக்க தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தற்போது வந்துள்ள தகவல் ஓபிஎஸ் தரப்பில் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சசிகலா, தினகரன் ஆதரவு மாவட்டங்களான டெல்டா பகுதிகளில் இருக்கும் நிர்வாகிகள் சில எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இதன் காரணமாக விரைவில் அவர்கள் ஓபிஎஸ் தரப்பில் ஐக்கியமாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் தரப்பில் தற்போது இருக்கும் வைத்தியலிங்கம் இதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வரும் நிலையில் விரைவில் அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள். மேலும் அடுத்தடுத்து நிர்வாகிகளை இழுக்கவும் ஓபிஎஸ் தரப்பு திட்டம் திட்டி வரும் நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் வரும் வரை தங்கள் திட்டம் தொடரும் ’’ என்றவர்கள், அடுத்து கூறியதுதான் எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
அதாவது, ‘‘டெல்லி மேலிடம் எடப்பாடி பழனிசாமியிடம் ஓட்டுமொத்த அ.தி.மு.க.வும் செல்வதை விரும்பவில்லை. ஓ.பி.எஸ். மீது வைத்துள்ள நம்பிக்கை, எடப்பாடியிடம் அவர்களுக்கு இல்லை. இந்த நிலையில்தான் நேற்றுகூட நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து தமிழக ஆளுநர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியிருக்கின்றனர். அதாவது, கொங்கு மண்டலத்தை தவிர எடப்பாடிக்கு மற்ற மாவட்டங்களில் செல்வாக்கு இல்லை. எனவே, கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க. காலூண்ற தயாராகி வருகிறது.
அதே சமயம், அ.தி.மு.க.வின் வாக்குகளை அப்படியே அள்ளியாக வேண்டும் என்று கணக்கு போட்டிருக்கிறது. அந்த கணக்குப் படி ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க., டி.டி.வி. தலைமையிலான அ.ம.மு.க., சசிகலா ஆதரவுடன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க முடிவு செய்திருக்கிறார்கள். இந்த ‘முடிவு’தான் ஓ.பி.எஸ். தரப்பிற்கு மகிழ்ச்சியையும், எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. இன்றும் ஆறு மாதத்தில் எல்லாம் சுபமாக முடியும். அப்போது எடப்பாடி பழனிசாமி எங்கிருக்கிறார் என்று பாருங்கள்’’ என்று நம்மிடமே புதிரை போட்டனர்!
‘மேலிடம்’ கொடுத்த ‘கிரீன்’ சிக்னல்தான் ஓ.பி.எஸ். தரப்பை உற்சாகத்துடன் களத்தில் இறங்கி வேலை பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறது!