தேர்தல் கமிஷன் சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பங்கேற்றார். அவர் அருகில் இருந்த அதிமுக பெயர் பலகையை பழனிசாமி ஆதரவாளர் ஜெயக்குமார் தன் அருகே எடுத்து வைத்துள்ளார். இது தொடர்பான படங்கள் வைரலாகியுள்ளன.
ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணிகள் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் (கலெக்டர்கள்) ஆலோசனை நடத்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட தமிழக அரசியல் கட்சிகளுக்கு இன்று (ஆகஸ்டு 1) காலை தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் துவங்கியது.
கூட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே முதல்ஆளாக அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் வந்து அமர்ந்தார். அதன்பிறகு, பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால், இந்த இருதரப்பு கருத்துகளும் அதிமுக.,வின் கருத்தாகவே ஏற்றுக்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கூட்டத்தின்போது கோவை செல்வராஜ் அருகே இருந்த ‘அதிமுக’ என்னும் பெயர் பலகையை அலாக்காக தூக்கிய ஜெயக்குமார் தனக்கு அருகில் வைத்துக்கொண்டார்.
அதிமுக என்றால் தங்களது தரப்பே என்பதை குறிக்கும் வகையில் ஜெயக்குமார் பெயர் பலகையை தன்னருகில் வைத்துக்கொண்டார். இந்த படங்கள் தற்போது வைரலாகியுள்ளது. இக்கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியும், பாஜ சார்பில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் தரப்பில் தாமோதரன், நவாஸ், இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் ஏழுமலை, பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பன்னீர்செல்வம் தரப்பில் அவரது ஆதரவாளரான கோவை செல்வராஜ் கலந்துக்கொண்டுள்ள நிலையில், தானும் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் எனக் கூறிக் கொண்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் என்பவர் பங்கேற்க முயன்றார். அவரை அங்குள்ள அதிகாரிகள் வெளியேற்றினர். பழனிசாமி தரப்பில் மட்டும் இருவர் கலந்துக்கொண்டுள்ள நிலையில், பன்னீர்செல்வம் தரப்பில் மட்டும் ஒருவர் மட்டும் தான் அனுமதியா என அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பன்னீர்செல்வம் லெட்டர் பேடில் கோவை செல்வராஜ் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்ததாக தெரிவித்து அவரை வெளியேற்றினர்.