ஆகஸ்ட் 1ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான தேர்தல் ஆணையம் ஆலோசனை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கைகளே இதுவரை ஓங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து, தொண்டர்களுடனான போராட்டம் வரை எடப்பாடி பழனிசாமி அனைத்து தரப்பினரையும் தன் பக்கம் இழுத்துள்ளார்.
ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம், நீதிமன்றத்தில் வழக்கு மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நீக்கம், நீக்கப்பட்டவர்களின் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் என்று செயல்பட்டு வருகிறார். இதனிடையே எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கியது மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமனம் செய்தது தொடர்பான கடிதத்தை ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனிடையே நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது. இப்பணிகளை 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கென ‘6 பி’ என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி ஆலோசனை நடத்தப்படுகிறது. அன்று தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையிலும், தொடர்ந்து, மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையிலும் இந்த ஆலோசனை கூட்டங்கள் நடக்க உள்ளன.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாட்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பிய நிலையில், தேர்தல் ஆணையத்துடனான ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த விவகாரம்தான் ஓ.பி.எஸ். தரப்பை அப்செட்டில் ஆழ்த்தியிருக்கிறது!