பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அரசின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி வருகிறார். பல குற்றச்சாட்டுகளை மறைமுகமாகவும், பல குற்றச்சாட்டுகளை நேரடியாகவும் சுமத்துகிறார். அவற்றிற்கெல்லாம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகப் பதில் சொல்லாவிட்டாலும் இரண்டாம் கட்டத் தலைவர்களை வைத்து எதிர் கொள்ள வைக்கிறார். அவற்றில் அவர் எதிர் கொள்ளத் தவறிய அல்லது நேரில் எதிர் கொள்ள வேண்டிய குற்றச்சாட்டுகளில் ஒன்று தமிழக காவல்துறையில் முக்கிய அங்கம் வகிக்கும் உளவுத்துறை பற்றியதாகும்.

குறிப்பாக உளவுத்துறையில் பல பிரிவுகள் உள்ளன. அதுவும் காவல்துறைதான் என்றாலும் காவல்துறையின் பணிகளைப் பற்றி தமிழக அரசுக்கும், காவல்துறையின் உயரதிகாரிக்கும் சில பிரிவுகள் மத்திய அரசுக்கு அப்போதைக்கப்போது தகவல் அனுப்புவதற்கும் என பல பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று தமிழக முதல்வருக்கே நேரடியாகத் தகவல் அனுப்பவும் பணிகள் செய்து வருகின்றன. அந்தப் பிரிவுகளில்தான் குளறுபடிகள் நடக்கின்றன என்று பகிரங்கக் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார் அண்ணாமலை.

அதாவது குறிப்பிட்ட உளவுப் பிரிவில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களை தொடர்ந்து பணியில் அமர்த்திக் கொள்கிறது, அதன் மூலம் பல பணிகளில் காவல்துறையின் உண்மையான பணிகள் மறைக்கப்பட்டு பொய்யான தகவல்கள் கொடுக்கப் படுகின்றன என்பது குற்றச்சாட்டாகும்.

இது குறித்து புதுக்கோட்டை காவல்துறையில் நமது சோர்ஸ்கள் மூலம் விசாரித்தபோது… ‘‘ஆம். அது உண்மைதான். அண்ணாமலை ஐபிஎஸ் என்பதால் அவர் ஏற்கனவே பணி புரிந்தபோது இருந்த நண்பர்கள்தான் அவருக்கு ‘ஏ டூ இசட்’ என்று எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். தங்களது மேலதிகாரிகளுக்குச் சொல்கிறார்களோ இல்லையோ அண்ணாமலைக்குப் போட்டுக் கொடுத்து விடுகிறார்கள். அவற்றை மறைமுக ஆதாரங்களாக வைத்துக் கொண்டு திமுக அரசுக்கு எதிரான பல புகார்களை அண்ணாமலை அடுக்குகிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் அதிகாரிகளுக்கு ஊதியம் கொடுப்பது தமிழக அரசு. ஆனால் அவர்கள் வேலை பார்க்கிறது அண்ணாமலைக்கு. அந்தத் தில்லுமுல்லுக்காக குறுக்கு வழியில் வருமானம் நிறையக் கிடைக்கிறது. இது தமிழக அரசுக்கும் திமுக அரசாங்கத்திற்குமே பெரும் பின்னடைவாக இருக்கும்.
இது தமிழக முதல்வருக்கும் தெரிந்துதான் இருக்கிறது. அதனால்தான் பல இடங்களில் காவல்துறை இன்னும் அதிமுகவிற்கு ஆதரவாகச் செயல் படும் தன்மையை மாற்றிக் கொள்ளவில்லை என்று முதல்வரே புலம்புகிறார். அதாவது பல துறைகளைத் தங்களது கைக்கூலிகளாக மாற்றி வரும் பாஜக தமிழக உளவுத்துறைகளின் பல பிரிவுகளையும் மாற்றி வைத்திருக்கிறது என்பது உண்மை’’என்றார்கள்.
மேலும் புதுக்கோட்டை மாவட்ட காவல் நிர்வாகம் குறித்து கூறுகையில், ‘‘புதுக்கோட்டையில் எஸ்பி.யாக பா.மூர்த்தி இருக்கும்போது இருந்த காவல்துறை நிர்வாகமே வேற லெவலாக இருந்தது. அதற்குப் பிறகு வந்தவர்களில் டாக்டர் அருண் சக்திகுமார் இருந்தபோது பல அதிரடியான செயல்களில் இறங்கி குற்றச் செயல்களை பெருமளவு குறைத்தார். அதனால் காவல்துறைக்கு குறுக்கு வழியில் கிடைக்கும் வருமானம் சுத்தமாக நின்று போகும் அளவிற்கு வந்தது.

என்னதான் அவர் சரியாகச் செயல்பட நினைத்தாலும் அவருக்குக் கீழ் இருந்து பணி புரியும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் என்ன நடக்கும்? அது சரியாகவே நடந்து விட்டது. அவர் இந்தப் பணியை விட்டு விட்டு மத்திய அரசின் உளவுப் பணிக்குச் சென்று விட்டார்.

சட்டம் ஒழுங்குப் பிரச்னையில் இருக்கும் சீர் கேடுகள் ஒரு புறம் பெரிய ரவுடியிசமாக இருந்தபோதிலும் அவர்களைவிட அதிகமாகக் கல்லா கட்டும் பணியில் இருப்பவர்கள் உளவுத்துறை போலீசார்தான். அவர்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் முடியாது என்பதால் பல பணிகளில் லட்சக் கணக்கில் மாதம்தோறும் பெற்று விடுகிறார்கள். அவர்களது இந்த அடாவடியால் அவர்களைப் போன்ற மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. ஆனால் நேர்மையாகப் பணியாற்றும் மற்றவர்கள் படும் தொல்லை அளவுக்கு மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.
மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் ஒரே பணியில் இருக்கக் கூடாது என்பது காவல்துறையின் விதிகளில் ஒன்று. ஆனால் பத்தாண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் ஒரே பணியில் இருக்கும் மாநில உளவுப் பிரிவுப் போலீசாரும் உள்ளனர். மணல் கடத்தல், லாட்டரி சீட்டு விற்பனை, கஞ்சா விற்பனை, கள்ளச்சாராயம் செய்பவர்கள் என அவர்களிடம் மாதாமாதம் வசூலிப்பதில் ஸ்டேசன் போலீசாரைவிட அதிகமாகவும் முன்கூட்டியும் வசூலித்து விடுகிறார்கள். இவர்கள் மீது ஐஜி லெவலில் உள்ளவர்கள்கூட நடவடிக்கை எடுக்கத் தயங்குவார்கள் என்பதால் இவர்களின் குற்றச் செயல்களின் பட்டியல் அதிகமாகவும் மறைமுகமாகவும் இருக்கும். இதையும் அண்ணாமலை சுட்டிக் காட்டி வருகிறார்.

இவர்களின் இந்தப் பணிக்கு இடர்பாடாக நேர்மையாக இருப்பவர்களை பழிவாங்கும் செயலில் இறங்குவதும் உண்டு. உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டும் என்றால் கடந்த சில மாதங்களுக்கு முன் கடற்கரைக் காவல் நிலையத்தில் பணி புரியும் பெண்காவலரும் கடலை நகரில் பணிபுரியும் கர்ப்பிணி பெண் காவலரும் (சுமார் 70 கி.மீ தொலைவில் பணிபுரியும்) இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று ஒரு முகவரியில் இருந்து பொய்யான புகார்க் கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அந்தக் கடிதத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க உளவுத்துறை மேலதிகாரிகள் ஏமாறும் வகையில் உண்மைக்கு புறம்பாக அறிக்கை தயார் செய்து அனுப்பி இருவரையும் ரேஞ்ச் விட்டு ரேஞ்ச் பணியிட மாறுதல் செய்ய வழிவகை செய்து விட்டனர்.

நடக்காத சம்பவத்திற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார்களே என்று புலம்பிய அந்தக் காவலர்கள் மேலதிகாரிகளிடம் முறையிட்டபோது சம்பந்தப்பட்ட டிஎஸ்பி நேரடியாக விசாரணையைத் துவக்கியிருக்கிறார். எந்த முகவரியில் இருந்து கடிதம் வந்ததோ அந்த முகவரியில் உள்ள நபரிடம் விசாரித்தபோது அப்படியொரு கடிதத்தை நான் எழுதவே கிடையாது என்று சொல்லி உறுதியாக மறுப்பு தெரிவித்திருக்கிறார் அந்த கடித முகவரியில் உள்ள நபர். அதையும் ஐஜி லெவலுக்குக் கொண்டு போயிருக்கிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள். அவர் தன்னால் ஒன்றும் செய்ய இயலாது உளவுத்துறை அறிக்கை என்றும், மாறுதல் என்று போட்டு விட்டால் அங்கு ஓராண்டுக்காவது பணி புரிந்துதான் ஆக வேண்டும் என்று சொல்லி விட்டார். நேர்மை என்ற ஒற்றை வார்த்தையோடு காவல்துறையில் பணி செய்த நிலையில் பொய்யான ஒன்றிற்கு தண்டனையா என்று வேதனையில் அந்த பெண் காவலர்கள் இருக்கிறார்கள்.

யார்தான் இந்த மொட்டைக் கடிதத்தை எழுதியிருக்கிறார்கள் என்று நுணுக்கமாக விசாரித்தபோது மாநில அரசுக்கு உளவுத்துறை போலீசாக இருக்கும் ஒரு நபர்தான் இந்தக் கடிதத்தை தானே எழுதி அனுப்பி அதற்கு தகுந்தார்போல் அறிக்கை தயார் செய்து அனுப்பி இருப்பதாக தெரிகிறது. அவர் கடற்கரைப் பகுதியில் இருக்கும் கடத்தல் ஐஐ கஞ்சா விற்பனை. மணல் கடத்தல் காரர்களிடம் நீண்ட நாட்களாக நேரடித் தொடர்பில் இருந்து கொண்டு மாதம்தோறும் லட்சங்களைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு விசுவாசமாக இருந்து வருகிறார். அது வெளியில் தெரிந்து விடுமோ என்று அஞ்சி மொட்டைக் கடிதத்தை தயார் செய்து அதில் பெண் காவலர்களையும் சம்பந்தமில்லாமல் சேர்த்து அனுப்பியிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

ஒரு புகார் வருகிறது என்றால், அதை விசாரித்து அது பொய்தான் என்று தெரிய வந்த நிலையில் தண்டனையை எடுத்து விடுவதுதான் சரியாக இருக்கும். அதைச் செய்யாதது மட்டுமல்ல வரும் புகாரில் உள்ள உண்மைத்தன்மையைக்கூட புரிந்து கொள்ள முடியாத துறை எப்படி மற்றவர்களிடம் உண்மையாக நடந்து கொள்ளப் போகிறது என்ற சந்தேகமும், பயமும் காவல்நிலையங்களில் பணியாற்றும் போலீசாரிடம் கிளம்பியிருக்கிறது’ என்கிறார்கள்.

காவல்துறையில் உள்ளவர்களுக்கு காவல்துறையால் வரும் பிரச்சினைகளில் நேர்மையாக விசாரணை செய்ய முடியவில்லை என்றால் காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வருக்கு கெட்ட பெயர்தான் ஏற்படும். மேலும் அவருக்குத் தகவல் சொல்லும் போலீசாரே வேறு இடங்களில் போய் கையை நீட்டிக் கொண்டு வேலை பார்த்தால் எங்கோ நடக்கும் கலவரங்கள் இங்குள்ள பாதுகாப்பை கேள்விகுறியாக்கி விடும்.
நீண்ட நாட்களாக உளவுத்துறையில் உலவும் குளறுபடிகளையும், லஞ்ச ஊழல் கிருமிகளையும் புதிதாக பொறுப்பேற்றுள்ள மருத்துவர் அகற்றி உளவுத்துறையை உயிர்பித்து சிறக்க வைப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal