தமிழகத்தில் ஆளுங்கட்சியின் தூக்கத்தை அவ்வப்போது கெடுத்து வருகிறார் அண்ணாமலை. அதாவது, இதற்கு முன்னர் ஜெயலலிதா இருந்தபோது கூட, இந்தளவிற்கு ஆளுங்கட்சிக்கு குடைச்சல் கொடுத்தது கிடையாது. இந்த நிலையில்தான் பிரதமர் மோடியின் ‘குட் புக்’கில் அண்ணாமலை இடம் பிடித்திருப்பது தமிழக பா.ஜ.க.வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது!

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைவதை தொடர்ந்து கடந்த ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட திரௌபதி முர்மு வெற்றிபெற்று உள்ளார்.

இதனை தொடர்ந்து நாளை நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்க உள்ளார். ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிவிட்டு ஓய்வு பெறுகிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓய்வுபெறும் நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் நேற்று அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.

இந்த பிரிவு உபசார விழாவில் பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்தையும் அளித்தார். இதில், ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், நாளை குடியரசுத் தலைவராக பதவியேற்க இருக்கும் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பல மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பங்கேற்று இருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், ‘‘மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழ்நாடு பாஜக சார்பில் சந்திப்பது எனக்கு கிடைத்த மரியாதை. நாட்டுக்காக அவர் ஆற்றிய பணிக்கு நன்றி கூறிவிட்டு அவரை வாழ்த்தினேன். பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்தேன். தமிழ்நாடு மக்கள் மீதான பிரதமரின் அக்கறைக்கும் அன்பிற்கும் நன்றி’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்ட பிரிவு உபசார விழாவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை தவிர்த்து, பிற மாநில பாஜக தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பாஜகவால் ஆட்சியை பிடிப்பது கடினம் என்ற பேச்சு நிலவி வருகிறது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் கட்சியில் இணைந்து அடுத்த சில மாதங்களில் மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட சிறப்பு அழைப்பு பிற மாநில பாஜகவினரின் புருவத்தை உயர்த்தி இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal