தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் அமைச்சர்கள் ‘குறுக்கு வழயில்’ சென்றுவிடக் கூடாது என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையான நிபந்தனைகளை விதித்தார். அரசியல் கட்சியினர் தலையீடுகள் இன்றி, பொதுமக்கள் வியக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்றும், யாராவது தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சமீபத்தில் நாமக்கல்லில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் எச்சரித்தார் முதல்வர்!

இந்த நிலையில்தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில், ‘‘டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 300’’ என்ற சொகுசு காரை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்நேரு, நேரடியாக இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழக அமைச்சர்கள், அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள ‘இன்னோவா கிரிஸ்டா’ கார்களை பயன்படுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினிடம் கூட இல்லாத, ‘டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 300’ என்ற, புத்தம் புதிய 2022ம் ஆண்டு மாடல், எஸ்.யூ.வி., ரக காரை, அமைச்சர் கே.என். நேரு வாங்கி உள்ளார். இவர் ஏற்கனவே, லேண்ட் க்ரூஸர் ரக கார்களை தான் பயன்படுத்தி வந்துள்ளார்.

அமைச்சரான பின், தற்போது புதிய வரவாக, ‘‘லேண்ட் க்ரூஸர் எல்சி 300’’ எனும் ஸ்போர்ட்ஸ் மாடல் காரை, இறக்குமதி செய்துள்ளார். இந்த ரக காரை, டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்வதாக அறிவித்ததும், பல நாடுகளில் நிறைய பேர் ‘புக்’ செய்து, நான்கு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இந்தியாவில் இந்த காரின் அறிமுக தேதி, அடுத்த ஆண்டு, மார்ச் 2 என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

அப்படி இருக்கையில், அமைச்சர் கே.என்.நேரு அந்த காரை, நேரடியாக இறக்குமதி செய்துள்ளதாக தெரிகிறது. புதிய காரின் விலையை, வரும் பண்டிகை காலத்தில் தான் டொயோட்டா அறிவிக்க உள்ளது. இருப்பினும், 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து, இந்த சொகுசு காரை, கே.என்.நேரு இறக்குமதி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

முன்பெல்லாம் மலைக்கோட்டை மக்களின் எண்ணவோட்டங்களை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்பட்டார் கே.என்.நேரு! ஆனால், தற்போது யார் சென்றாலும் ‘கடுகடு’வென பேசுவதால் கட்சியினர் மட்டுமில்லை… பத்திரிகையாளர்கள் கூட கேள்வி கேட்க தயங்கிக் கொண்டு செல்வதில்லை. இந்த நிலையில் வாக்களித்த வாக்காளர்கள் எப்படி கே.என்.நேருவிடம் செல்வார்கள் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் புரிந்துகொள்வாரா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal