கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளியில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி செல்வகுமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜெடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூர் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடந்த நிலையில் நேற்று முன்தினம் இப்போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியதுடன், மாணவர்களின் கல்வி சான்றிதழ்களையும் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. கள்ளக்குறிச்சி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி இதுவரை 300ற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரிக்க சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபிநவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வக்குமார் மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கூடுதல் செயலர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜெடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal