அ.தி.மு.க.வின் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நத்தம் விஸ்வநாதனை, எடப்பாடி பழனிச்சாமி நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. வி

அதிமுகவில் கடந்த ஒரு மாதகாலமாக உட்கட்சி பூசல் பிரச்சினை நீடித்தது. அதிமுக அலுவலகத்தில் நடந்த சண்டையால் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையே போர்க்களமானது. நடந்த களேபரத்தால் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அன்றைய தினமே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவிகளை எல்லாம் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து பறித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவின் ஒற்றைத்தலைமையாக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள எடப்பாடி பழனிச்சாமியோ கட்சியில் வரிசையாக நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். துணைப்பொதுச்செயலாளர்களாக நத்தம் விஸ்வநாதன், கே.பி முனுசாமி ஆகியோரை அறிவித்தார். கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்துள்ளார்.

இதனிடையே ஓ.பன்னீர் செல்வம் தற்போது வகித்து வரும் எதிர்கட்சித் துணைத்தலைவர் பதவியை பறித்து நத்தம் விஸ்வநாதனுக்கு கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்கட்சி துணைத்தலைவர் தேர்வு பற்றி பரிந்துரையை விரைவில் சட்டசபை சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி அனுப்பி வைக்க உள்ளதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டுவதாக, ஓ.பி.எஸ். தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடியார் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal