விருதுநகரில், அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க வந்த பெண்ணை வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் அடித்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், ‘அமைச்சர் என்னை அடிக்கவில்லை’ என்று அப்பெண் திடீர் பல்டி அடித்திருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் இலவச ஆடு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றார். அதே ஊரை சேர்ந்த கலாவதி என்ற பெண், உதவி கோரி அமைச்சரிடம் மனு அளிக்க வந்தார். அவரிடம் மனுவை வாங்கிய அமைச்சர், அந்த மனுவால் அப்பெண்ணை அடித்தார். அதை, சுற்றி இருந்த நிருபர்கள் பார்த்தனர்; போட்டோகிராபர்கள் படம் பிடித்தனர்.அமைச்சர் மன்னிப்பு கேட்கும் வரை, பா.ஜ.க, போராட்டம் நடத்தும் என, தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

இதனால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமைச்சரிடம் அடி வாங்கிய பெண் கலாவதி, ‘‘அமைச்சர் ராமச்சந்திரன் எங்கள் பகுதியில், எங்களுடைய நல்லது, கெட்டதுகளில் பங்கேற்பார். என் அம்மாவுக்கு முதியோர் உதவித் தொகை பெற மனு அளித்தேன். நாங்கள் தாயாக, பிள்ளையாக பழகுபவர்கள். சம்பவத்தன்று அமைச்சர் எங்கள் கிராமத்திற்கு வந்திருந்தார்.

நான் அளித்த மனுவை வாங்கியவர் உடனே செய்து தருவதாக சொன்னார். ஒரு வகையில் எங்களுக்கு அவர் உறவுமுறை உள்ளவர் தான்; வேறெதுவுமில்லை. மனு கவரை வைத்து செல்லமாகத் தான் என் தலையில் தட்டினார்’’ என திடீர் ‘பல்டி’ அடித்தார்.

வருவாய்த்துறை அமைச்சர் ‘செல்லமாக’ தட்டியதுதான் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal