அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரை அடிமட்டத் தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்ற எம்.ஜி.ஆரின் ஃபார்முலாவை கையில் எடுத்து அதில் வெற்றி பெற முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுக்குழு வரும் ஜூலை 11ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் இந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதியிடம் முறையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று 2 நீதிபதிகள் அமர்வு இந்த பொதுக்குழு தடை வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டதால் தனி நீதிபதிகள் அமர்வில் ஓ பன்னீர்செல்வம் முறையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் எந்த தடையும் விதிக்காத பட்சத்தில் பொதுக்குழு திட்டமிட்டபடி ஜூலை 11ம் தேதி நடைபெறும். இதற்காக வானகரத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு திறந்தவெளி மைதானத்தில் தற்போது மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த வரைவு தீர்மானங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டன.

ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கும் தீர்மானம், திமுகவிற்கு எதிராக தீர்மானம், சில தமிழ்நாடு நலன்கள் தொடர்பான தீர்மானங்கள் ஆகியவை நிறைவேற்றப்பட உள்ளன. அதேபோல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. கடைசியாக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

ஆனால் இங்குதான் சட்ட ரீதியாக சில விஷயங்களை அதிமுக பொதுக்குழு செய்ய இருக்கிறதாம். அதன்படி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக மட்டுமே எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார். அதன்படி தொண்டர்கள் மூலம் வாக்குகள் செலுத்தப்பட்டு அவர் நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார். இதன் மூலம் அவரின் பதவிக்கு சட்ட ரீதியாக பலமான சப்போர்ட் இருக்கும்.

மாவட்ட அளவில் தீர்மானங்களை நிறைவேற்றி, வட்ட அளவிலும் தீர்மானங்களை நிறைவேற்றி, எடப்பாடிக்கு ஆதரவாக எல்லா மாவட்டங்களிலும் வாக்கெடுப்பு நடத்தி அதன்பின் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்படுவார். அதிமுகவை வழி நடத்துபவரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று எம்ஜிஆர் கூறியது போல என்னை தொண்டர்கள் தேர்வு செய்துள்ளனர். தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளர் எடப்பாடி என்று கூறுவதற்கு வசதியாக எடப்பாடி பழனிசாமி தரப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் தொண்டர்கள் ஆதரவு எனக்கே இருக்கிறது. தொண்டர்கள் என் பக்கமே இருக்கிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு காசு கொடுத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்றுவிட்டார் என்று ஓ பன்னீர்ச்செல்வம் தரப்பு தெரிவித்து வருகிறது. ஓ பன்னீர்செல்வம் தரப்பின் அந்த வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாக்கெடுப்பு முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் தொண்டர்களும் என் பக்கம்தான் என்று எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க முடியும். ஓ பன்னீர்செல்வம் தனக்கு தொண்டர்கள் சப்போர்ட் இருக்கிறது என்று இத்தனை நாட்களாக கூறி வந்தார்.. தற்போது அதுவும் தன்னிடம்தான் உள்ளது என்பதை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி இந்த வியூகத்தை வகுத்து இருக்கிறாராம்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த ‘மாஸ்டர்’ பிளான் பின்னணியில் ஆத்தூர் இளங்கோவன் இருப்பதாக கூறப்படுகிறது. அவர், இதற்கான வியூகங்களையும், செயல்முறை, நடைமுறைகளை வகுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் இ.பி.எஸ். வெற்றி பெற்றுவிட்டார். தானாகவே ஓ.பி.எஸ். ஓரங்கட்டப்படுவார் என்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal