கடந்த தி.மு.க. ஆட்சியின் போது சென்னை உள்பட பல மாநகராட்சிகளின் உள்ளாட்சி பிரதிநிதிகளின் அத்து மீறலால்தான், 2011&ல் நடந்த சட்மன்றத் தேர்தலில் தி.மு.க.வால் எதிர்க்கட்சியாகக் கூட வரமுடியவில்லை!
‘கணவர்களுடன் கைகோர்த்து முறைகேட்டில் ஈடுபடும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்திருக்கிறார்!
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சேலம் சாலையில் உள்ள பொம்மைகுட்டைமேட்டில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநில மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டுக்கு தலைமை வகித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று நீங்கள் இங்கு வந்திருப்பது சாதாரண விஷயமல்ல. இந்த வெற்றிக்கு பின்னால், உங்களின் உழைப்பும், தியாகமும், போராட்டமும், திறமையும் இருக்கிறது. நீங்கள் ஏற்றிருப்பது சாதாரண பொறுப்பல்ல. இது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை விட உயர்ந்த பொறுப்பா? என்று நினைக்கக் கூடாது. உள்ளாட்சி அமைப்பு என்பது மக்கள் பணிக்கான உயிர்நாடி. அந்த பணியின் மகத்துவம் அறிந்து பணியாற்ற வேண்டும்.
எனவே, உள்ளாட்சி பொறுப்புகளை நீங்கள் எளிதாக எடை போடக்கூடாது. மக்கள் பணி என்பது தான் நமது முதல் பணியாக இருக்க வேண்டும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம்தான் மக்களுக்கு நேரடியாக தொண்டாற்ற முடியும், அதற்கான பயிற்சி முகாம் தான் இங்கு நடக்கிறது. மிகச்சிறிய வயதில் கலைஞரின் கருத்துகளை உள்வாங்கி அரசியல் பாதையை தேர்ந்தெடுத்தேன். ஆனால், கலைஞரோ என்னை படி.. படி.. என்றார். எனக்கு அரசியல் படிப்பும், மக்கள் பணியுமே கனவாக இருந்தது. அதனால்தான் பெரியார், அண்ணா, கலைஞர் வழியை பின்பற்றி மக்கள் பணியை தேர்ந்தெடுத்தேன். ஒரு கொள்கைக்காக உழைக்க களமிறங்கினேன். அப்படி உழைத்த எனக்கு பாராட்டுகள் கிடைக்கவில்லை. சிறைவாசம்தான் கிடைத்தது.
அதற்கு பின்பு புடம் போட்ட தங்கமாக வெளியே வந்தேன். 1977ம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த எனக்கு 1989ம் ஆண்டுதான் சட்டமன்றத்தில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் நுழைய 12 ஆண்டுகள் ஆனது. பொறுப்புகள் என்பது உடனடியாக கிடைக்காது. அதற்காக காத்திருக்க வேண்டும். அதுவும் சிலருக்கு மட்டுமே கிடைக்கும். எந்த வாய்ப்பும் பெறாமல் கழகத்திற்கு உழைத்து மறைந்தவர்கள் பலர் உண்டு. ஆனால், அதற்கு மாறாக உங்களுக்கு பொறுப்பு கிடைத்திருக்கிறது. அதை எப்படி நாம் பயன்படுத்துகிறோம் என்பதும், தக்க வைத்து கொள்வதும்தான் முக்கியம்.
அதற்கு உங்கள் கையெழுத்தின் வலிமையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தாகத்தால் தவிக்கும் மக்களுக்கும், உதவி கேட்கும் விவசாயிகளுக்கும், நோயால் வாடும் ஏழைகளுக்கும் உங்கள் கையெழுத்தால் தீர்வு கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்கும் தீர்வு தான், உங்கள் கையெழுத்தின் மிகப்பெரிய சக்தி. இந்த சக்தி உங்கள் கையில் இருக்கிறது. அதை மக்களுக்காக பயன்படுத்துங்கள். இந்த வகையில் நான் போட்ட கையெழுத்து பல லட்சம் மக்களின் துயரங்களை தீர்த்திருக்கிறது. இந்த சக்தியை கொடுத்தவர்கள் மக்கள், முதல்வர் என்ற சக்தியை மக்கள் கொடுத்ததால்தான் இந்த சாதனைகளை செய்ய முடிகிறது.
உங்களை தேடி வரும் மக்களுக்கு தவறாமல் பணியாற்ற வேண்டும். மாநகராட்சி மேயர் முதல் வார்டு கவுன்சிலர் வரை யாரும் எந்த தவறும் செய்யக் கூடாது. அப்படி பணியாற்றுவதுதான் நமது கடமை என்பதை உணர்த்துவதே இந்த மாநாட்டின் நோக்கம். பெண்கள் எதற்கும், யாருக்கும் பயப்படாமல் பணியாற்ற வேண்டும்.
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, சட்டப்படி – விதிமுறைப்படி – நியாயத்தின்படி – மக்களுக்காக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நான் கடுமையாக எச்சரிக்கிறேன். கட்சிரீதியான நடவடிக்கை மட்டுமல்ல, சட்டரீதியான நடவடிக்கையே எடுக்கப்படும். நான் அதிகப்படியான ஜனநாயகவாதியாக ஆகிவிட்டேன் என்று எனக்கு நெருக்கமான சில நண்பர்கள் அடிக்கடி சொல்கிறார்கள். ஒழுங்கீனமும் – முறைகேடும் தலைதூக்குமானால், நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்பதை – உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, இங்குள்ள அனைவருக்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
50 ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த பலன் இது. இதற்கு பின்னால் கோடிக்கணக்கான தொண்டர்களின் உழைப்பு உள்ளது. என்னை நம்பி அவர்கள், கட்சியையும், ஆட்சியையும் ஒப்படைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் காரியத்தை யாரும் உருவாக்கக் கூடாது என்று தாழ்ந்து பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன். எனது வேண்டுகோளை ஏற்று அனைவரும் பணியாற்ற வேண்டும். உள்ளாட்சி பொறுப்பில் உங்களிடையே ஒற்றுமை வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளும், அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். மேயரும், துணை மேயரும் பேசுவதில்லை. பஞ்சாயத்துகளில் தினமும் பஞ்சாயத்துகள் என்ற செய்திகள் எனது செவிக்கு வருகிறது. இதற்கு நீங்கள் இடம் கொடுக்கக்கூடாது. ஒற்றுமையுடன் இருந்து ஊருக்கு உழைக்க வேண்டும்.
இது உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மாநாடு அல்ல. திமுகவின் மாநில மாநாடு போல் உள்ளது. நாமக்கல்லை திமுகவின் கோட்டையாக ராஜேஸ்குமார் மாற்றியுள்ளார். இளமையான மாவட்ட செயலாளராக இருந்தாலும், தானும் தேர்ந்த மாவட்ட செயலாளர் என்பதை நிரூபித்துள்ளார். அவருக்கும், அவருக்கு தோள் கொடுத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்’’என்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி மனைவிமார்களை சுயமாக கணவன் மார்கள் செயல்பட விட்டாலே தி.மு.க.விற்கு ஏற்படும் அவப்பெயரை தவிர்க்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை!