அரசு பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:கோவை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய பள்ளிகளில் 2022- 23 ம் கல்வியாண்டில், 2022, ஜூன் 1 நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தகுதியான விண்ணப்பதாரர்கள், எழுத்து மூலமாக விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ, உரிய கல்வி சான்றுகளுடன், தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும். காலிப்பணியிட விவரங்கள், முதன்மை கல்வி, மாவட்ட கல்வி, வட்டார கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் இன்று வெளியிடப்படுகிறது.

விண்ணப்பிக்க வரும் 6 ம் தேதி கடைசி நாள். அன்றைய தினம் மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. விண்ணப்பங்களை, கோவை, பேரூர், சர்க்கார் சாமகுளம், பொள்ளாச்சி ஆகிய கல்வி மாவட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்.இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal