‘‘என்னை ‘சின்னவர்’ என அழைக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. என்னைப் புகழ்வதாக நினைத்து தலைவர் கலைஞரை சிறுமை படுத்திவிட வேண்டாம் என்றுதான் சொன்னேன்’’ என சேப்பாக்கம் & திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்!

சென்னை ஆதம்பாக்கத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கொடி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘‘திமுகவை பொருத்தவரை யாரும் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டாம். அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் தான் நான் அடிமை. என்னை யாரும் சின்னவர் என்று அழைக்க வேண்டும் என கூறவில்லை. ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகள் போதாதா. என் மீது உள்ள அன்பால் மூன்றாம் கலைஞர் என அழைக்கிறார்கள். என்னை பெருமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு முத்தமிழர் அறிஞர் கலைஞரை சிறுமைப்படுத்துகின்றனர்.

கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டும் தான் அதுவும் ஒரே கலைஞர் தான் உங்கள் வயது அனுபவம் ஆகியவற்றுக்கு நான் சின்னவன். அதே நேரத்தில் என்னை சின்னவர் என கூப்பிடுமாறு நான் யாரையும் சொல்லவில்லை. இளைஞர் அணி செயலாளராக மூன்று ஆண்டுகள் கழித்து நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். நான் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. பேரறிஞர் அண்ணா தந்தை பெரியார் ஆகியோரை நான் இதுவரை நேரில் பார்த்ததே இல்லை. நான் பார்த்ததெல்லாம் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், மற்றும் தளபதி ஸ்டாலினை தான்.

நான் மிகவும் ராசிக்காரன் என அண்ணன் ஆர்.எஸ்.பாரதி கூறினார். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாடாளுமன்றம் சட்டமன்றம் உள்ளாட்சி தேர்தல்களில் வாக்குகளை நான் கேட்டதால் தான் வெற்றி கிடைத்தது என்பது இல்லை. முத்தமிழறிஞர் கலைஞர், தலைவர் ஸ்டாலின், மற்றும் தொண்டர்களுக்கு உழைப்பாள் தான் இந்த வெற்றி கிடைத்தது. இந்த முழு வெற்றிக்கும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மட்டுமே பங்கு உள்ளது” என பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal