தமிழகத்தில் கருக்கலைப்பிற்காக மாத்திரை சாப்பிட்ட பத்தாம் வகுப்பு மாணவி பலியான சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அருகில் உள்ள மலையனூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 27). இவர் அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் மாணவி 4 மாதம் கர்ப்பமானார். முருகன் மாணவியை ரெட்டியார்பாளையத்தில் உள்ள காந்தி (65) என்ற பெண்ணிடம் அழைத்து சென்று மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார். இதற்கு பிரபு என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட மாணவி திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தானிப்பாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிவு செய்து முருகன், பிரபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த காந்தியை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவான காந்தியின் வீட்டில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்ததில் வீட்டில் ஏராளமான ஆங்கில மருந்து, மாத்திரைகள், ஊசி போன்றவை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு அதனை பறிமுதல் செய்தனர். காந்தி 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு தன்னை டாக்டர் என்றும், பிரபல மருத்துவமனையில் வேலை பார்த்ததாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டு தானிப்பாடி பகுதியில் பலருக்கு இதுபோன்ற சிகிச்சைகளை அளித்து வந்தது தெரியவந்துள்ளது.

அதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த போலி பெண் டாக்டர் காந்தியை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal