திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் உள்ளது. வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து வழிகிறது. தரிசனத்திற்காக நீண்ட தூரம் பக்தர்கள் தூக்கம் இன்றி விடிய விடிய காத்திருந்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்டவைகள் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. வைகுண்டம் காம்ப்ளக்சில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதால் சிரமம் அடைந்து வருவதாகவும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தேவஸ்தானம் வைகுண்டம் காம்ப்ளக்சில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தரிசன நேரம் ஒதுக்கீட்டு முறையில் ஆக்சிஸ் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு பெற்ற பக்தர்கள் வைகுண்டம் காம்ப்ளக்சில் இருந்து வெளியே சென்று தரிசனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வந்து தரிசனம் செய்து கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் கார்டு திட்டத்தால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பதியில் நேற்று 84,982 பேர் தரிசனம் செய்தனர். 46,679 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.42 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal