அதிமுகவில் பிரிந்த அணிகள் இணைந்த போதும், சி.வி.சண்முகம் மட்டும் இணையாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அ.தி.மு.க. அலுவலகத்தின் சாவியை சி.வி.சண்முகம் எடப்பாடி தரப்பிடம் ஒப்படைத்திருக்கிறார்.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட 25 எம்எல்ஏ-க்கள் அணி திரண்டனர். இதனால் அத்தனை பேரின் மாவட்டச் செயலாளர்களின் பதவியும் பறிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். குறிப்பாக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து சிவி சண்முகம் நீக்கப்பட்டது பேசுபொருளாகியது.
சிவி சண்முகத்தின் பொறுப்புக்கு அதிமுக நிர்வாகி பசுபதி நியமனம் செய்யப்பட்டார். இபிஎஸ் தரப்பின் இந்த அதிரடி ஆக்ஷன் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் எஸ்பி வேலுமணி உட்பட அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஆனாலும் சிவி சண்முகம் இதுவரை எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை.
ஆனாலும் மயிலம் தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் நேரடியாக சென்று சிவி சண்முகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும், சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் அரசியலில் இருந்து விலகலாமா அல்லது தவெக பக்கம் நகரலாமா என்று சிவி சண்முகம் ஆலோசித்து வருகிறார். இப்படியான சூழலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு நிர்வாகியான பசுபதி தரப்பிடம் விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தின் சாவியை சிவி சண்முகம் தரப்பு ஒப்படைத்துள்ளது. இதனால் சிவி சண்முகம் அதிமுகவில் இருந்து விலகும் முடிவை எடுத்துவிட்டாரா என்ற சந்தேகம் அக்கட்சியினர் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே அதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகள் தவெக பக்கம் சாயத் தொடங்கி இருக்கின்றனர். இப்படியான சூழலில் வன்னியர் சமூக மக்களின் முக்கிய அடையாளமாக சிவி சண்முகம் இருந்து வரும் சூழலில், அவரின் முடிவு அதிமுகவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பெரிதாக ஊழல் வழக்குகள் இல்லாத நிலையில், அவர் த.வெ.க.வில் விரைவில் இணையலாம் என்ற செய்திகள் இரு தரப்பில் இருந்தும் வருகிறது.
