கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, வாக்களிக்க இரண்டு தினங்கள் இருக்கும் போது, கடந்த கால தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்களை முதல் பக்கத்தில் போட்டு தி.மு.க.வை திக்குமுக்காடச் செய்தது எடப்பாடியார் தரப்பு..!

அதே போல் இன்றைக்கு தினசரிகளில் முதல் இரண்டும் பக்கம் ஓ.பி.எஸ்.ஸிற்கு ஆதரவாக விளம்பரங்களைக் கொடுத்து எடப்பாடியாருக்கு ‘பி.பி.’யை எகிற வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ்..!

அ.தி.மு.க.வில் நடக்கும் இத்தனை களேபரங்களுக்கும் மத்தியில் இப்படி ஒரு விளம்பரம் தேவையா என மூத்த நிர்வாகிகளிம் பேசினோம்.

‘‘அதிமுகவில் மிக தீவிரமான உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. ரத்தக்காயம் ஏற்படும் அளவிற்கு கட்சி நிர்வாகிகள் சண்டை தீவிரம் ஆகி உள்ளது. ஒற்றை தலைமை வேண்டும். எடப்பாடிதான் பொதுச்செயலாளர் என்று பெரும்பாலானவர்கள் சொல்லி வருகிறார்கள்!

‘ஒற்றை தலைமை ஏன்? இரட்டை தலைமையே நன்றாகத்தானே இருக்கு. எதுக்கு இந்த புது பிரச்சனை’ என்று ஓபிஎஸ் தரப்பு இன்னொரு பக்கம் வேட்டியை மடித்துக்கொண்டு ஆக்ரோஷமாக இருக்கிறது.

இந்த நிலையில்தான் ஓபிஎஸ் தனது பலத்தை காட்டும் விதமாக சென்னைக்கு தனது தொண்டர்களை, ஆதரவாளர்களை வர வழைத்து வருகிறார். தேனி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளை கூட்டம் கூட்டமாக வரவழைத்து வருகிறார்கள். முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளை சென்னையில் ஓபிஎஸ் தரப்பு களமிறக்கி உள்ளது. தனக்குத்தான் தொண்டர்கள் பலம் இருக்கிறது என்பதை காட்டும் விதமாக ஓபிஎஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

தொண்டர்களை களமிறக்குவதில் இதுவரை ஓபிஎஸ் கையே மேலோங்கி உள்ளது. எம்எல்ஏக்கள் ஆதரவு என்னவோ எடப்பாடிக்கு அதிகம் இருந்தாலும், தனக்குத்தான் தொண்டர்கள் ஆதரவு உள்ளது என்பதை காட்டும் வகையில் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாகவே சென்னை முழுக்க ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. ஓபிஎஸ்தான் ஒற்றை தலைவர்.. ஓபிஎஸ்தான் ஜெயலலிதா கண்டு எடுத்த தலைவர் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

சென்னையில் மட்டுமின்றி சேலத்திலும் இப்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. எடப்பாடி வீடு இருக்கும் நெடுஞ்சாலை பகுதியிலும் இப்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. தமிழ்நாடு முழுக்க.. எடப்பாடி ஏரியாவில் கூட தனக்குதான் ஆதரவு என்பதை காட்டும் விதமாக ஓபிஎஸ் இப்படி போஸ்டர்களை ஒட்டி வருகிறார். இந்த பணிகளை எல்லாம் கவனித்துக்கொள்வது என்னவோ ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்தான்.

இந்த நிலையில்தான், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு எதிராக தினசரிகளில் எடுத்த ஆயுதத்தை, இ.பி.எஸ்.ஸிற்கு எதிராக எடுத்திருக்கிறார் ஓ.பி.எஸ்., அதாவது இன்றைய தினசரிகளில் முதல் இரண்டு பக்கத்திற்கு படிப்படியாக ஓ.பி.எஸ். வளர்ந்த விதத்தை எடுத்துக்கூறியதோடு, ‘ஜெயலலிதாவின் ஆதரவு ஓ.பி.எஸ்.ஸிற்குதான்’ என்பதை விளக்கும் வகையில் அந்த விளம்பங்கள் இருந்தன! இந்த விவகாரம்தான் ஓ.பி.எஸ். தரப்பை குஷிப்படுத்தியிருக்கிறது. எடப்பாடி தரப்பை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது.

மேலும், பெங்களூரு புகழேந்தி, ‘ஓ.பி.எஸ். நினைத்தால் எடப்பாடியை கட்சியை விட்டே நீக்க முடியும்’ என்று ஏறி அடித்திருக்கிறார். இதையெல்லாம்¢ பார்க்கும் போது, ஓ.பி.எஸ்.ஸை சசிகலா இயக்குகிறாரோ என்னவோ தெரியவில்லை’’ என்றனர்!

இன்னும் அ.தி.மு.க.வில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal