‘ஒற்றைத் தலைமை’ விவகாரத்தில் ஓ.பி.எஸ். கடும் அப்செட்டில் இருக்க, எடப்பாடி பழனிசாமி இரண்டு சிக்ஸர் அடிக்கப் போகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்!

அது என்ன இரண்டு சிக்ஸர் என்ற விசாரணையில் இறங்கினோம். ‘‘தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுவது பாஜகவா அதிமுகவா என எழுந்த பிரச்சனையில், பாஜகவை ஓவர்டேக் செய்வதற்காக, தமிழ்நாடு முழுவதும் பயணித்து அதிமுகவை வலுப்படுத்த இபிஎஸ், ஓபிஎஸ் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், ஒற்றைத் தலைமை மோதல் எழுந்ததால் ஓ.பன்னீர்செல்வம் அப்செட்டாகி இருக்கிறார். அவர் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசித்து வருகிறார். இந்நிலையில், போட்ட திட்டத்தை மாற்றாமல், தனது சுற்றுப் பயணத் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதில் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகவும் ஒரு அஸ்திரத்தை வைத்திருக்கிறார்.

திமுக அரசுக்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி, போராட்டங்களை நடத்தி லைம்லைட்டில் இருந்து வருவதால் அதிமுக குறித்து பொதுமக்கள் மத்தியிலேயே அதிருப்தி நிலவியது. பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது என அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசி வந்தனர். இதையடுத்து, இதுகுறித்து ஆலோசனையில் ஈடுபட்ட அதிமுக இரட்டைத் தலைமை, தமிழகம் முழுவதும் பயணித்து கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தனர்.

இதற்கிடையே தான், சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடாகக் கிளம்பியது. ஒற்றைத் தலைமை பேச்சு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு டென்ஷனை ஏற்படுத்திய நிலையில், அவர் கொந்தளித்துள்ளார். ஒற்றைத் தலைமை பிரச்சனை இந்த நேரத்தில் தேவையற்றது என்றும், கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரம் இது என்றும் பேசியுள்ளார்.

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அப்செட்டாகியுள்ள ஒ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். வரும் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எடுக்கப்போகும் முடிவுகள் குறித்து ஓ.பி.எஸ் ஆலோசித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் நடந்தால், எடப்பாடி பழனிசாமியோ, திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதால் அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியுள்ளார். முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் பெரும் கூட்டம் கூடியதால் தெம்பாக உணர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

கட்சியை பலப்படுத்தி, எதிர்க்கட்சி நாங்கள்தான் என நிரூபிப்பதற்காக திட்டமிடப்பட்ட இந்த சுற்றுப் பயணத் திட்டத்தை தற்போது ஓ.பி.எஸ்ஸுக்கு எதிரான அஸ்திரமாகவும் பயன்படுத்த முடிவெடுத்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி, அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களையும் சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டும் திட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆக, எதிர்க்கட்சி பிரச்சனையை சமாளிக்க போட்ட திட்டம், திடீரென்று கிளம்பிய ஒற்றைத் தலைமை விவகாரத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு கைகொடுத்துள்ளது’’ என்றனர்.

இரண்டு விஷயங்களிலும் இபிஎஸ் சிக்ஸர் அடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal