வாராணசியில் இன்று பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக வாராணசி சென்றுள்ள பிரதமர், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், கங்கைக் கரையில் உள்ள தசாஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்தார். வேத மந்திரங்கள் முழங்க, கங்கைக் கரை படித்துறையில் ஆரத்தியும் எடுத்தார்.

தொடர்ந்து அங்குள்ள கால பைரவர் கோயிலிலும் பிரார்த்தனை செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்தே வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் உட்பட பல மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், என்டிஏ கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள், என்டிஏ கூட்டணியின் முக்கிய தலைவர்கள், பிரதமர் உடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய செல்கின்றனர்.

பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள நிகழ்வில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்துகொள்கிறார். இதையொட்டி, இன்று காலை விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் வாராணசி சென்றுள்ள சந்திரபாபு நாயுடு, வேட்பு மனு தாக்கல் நிகழ்வுக்கு பின் பிரதமர் மோடியை சந்தித்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal