‘நான்தான் எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுகிறேன்… அ.தி.மு.க. அடுத்து ஆட்சி அமைக்கும்..!’ என்றெல்லாம் சசிகலா பேசிவந்த நிலையில், ‘‘சசிகலா அதிமுக.,வில் உறுப்பினர் இல்லை எனவும், அவருக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்ற பின்பு முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ‘‘மதம் சம்பந்தமான, கோயில் சம்பந்தமான விஷயங்களில் முழு விபரம் தெரிந்த பின்புதான் கூற முடியும். எல்லா மதத்தையும் சமமாக நடத்த வேண்டும். ஆண்டாண்டு கால வழிமுறைகளில், கோயில் வழிமுறைகளில் தலையிட கூடாது. ஆதீன விவகாரங்களில் மூக்கை நுழைக்க இந்த அரசு முயற்சிக்கிறது. 500 ஆண்டுகாலமாக பட்டண பிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. திமுக அரசு அதற்கு தடைவிதித்தது.

பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக அரசு இறங்கிவந்து அனுமதி கொடுத்தது. திமுக அரசு எதைபற்றியும் கவலைப்படவில்லை. குடும்பம் செழிக்க வேண்டும் எந்தெந்த துறையில் வருமானம் வரும் என்று பார்க்கின்றனர். மக்களை பற்றியும், விவசாயிகள் பற்றியும் சிந்திக்கவில்லை. சசிகலா அதிமுகவில் உறுப்பினர் இல்லை. அவருக்கும், அதிமுக.,விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தமிழகத்தில் ஆளும்கட்சியை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்கட்சிதான். ஆனால் பிரதான எதிர்கட்சி அதிமுக தான்’’ இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க.வில் சசிகலா இணைவார் என்று சிலர் கிளப்பிய வியூகங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal