தமிழக அரசியல் களத்தில், ‘நான்தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சசிகலா சரவெடியாக வெடித்திருக்கிறார்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் ஏ.குச்சிப்பாளையம் அருகாமையில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த பகுதி மக்கள் இந்த கெடிலம் ஆற்றில் குளிப்பது வழக்கம். அந்த வகையில், 3 நாட்களுக்கு முன்பு 2 சிறுமிகள் குளிக்க சென்றனர். அப்போது திடீரென அவர்கள் தடுப்பணையிலை ஏற்பட்ட நீரின் சுழற்சியில் சிக்கி கொண்டனர். இதனால் 2 சிறுமிகளும் பதறிப்போன நிலையில், அவர்களை காப்பாற்ற, அங்கிருந்த மற்ற 5 சிறுமிகளும் நீரில் குதித்தனர். ஆனால் அவர்கள் 5 பேரும் சிக்கினர். கடைசியில் 7 சிறுமிகளுமே உயிரிழந்தனர்.

இந்நிலையில், இதில், உயிரிழந்த 2 சிறுமிகளின் பெற்றோரை இன்று நேரில் சந்தித்து சசிகலா ஆறுதல் சொன்னார். சசிகலா அங்கு சென்றதுமே, பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர், அவரை பார்த்து கதறி அழுதனர். அதிலும் அந்த இளம்தாய், தரையில் புரண்டு வெடித்து அழுதார். அதை பார்த்ததும் சசிகலாவும் கண்கலங்கிவிட்டார். உடனே, அந்த பெண்ணின் தோளை தொட்டு ஆறுதல் சொல்லி, ‘கவலைப்படாதீங்க.. உங்க மகனை நான் பார்த்துக்கறேன்.. நான் இருக்கேன்’ என்று நம்பிக்கை வார்த்தைகளை கூறினார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, ‘‘கெடிலம் ஆற்றில் ஏற்பட்டிருந்த பள்ளத்தை முறையாக மூட வேண்டியது அரசின் பொறுப்பு அதை செய்திருந்தால் இதுபோன்று 7 பேர் உயிர் இழப்பு ஏற்பட்டிருக்காது. இந்த கிராமத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள், கழிப்பறை வசதி இல்லாததால் மாற்று பகுதிக்கு சென்று அங்கு குளித்ததால் தான் பலியாகி உள்ளனர். எனவே இந்தக் கிராமம் முழுவதும் கழிப்பறை வசதியை உடனடியாக ஏற்படுத்தித் தரவேண்டும். திராவிட மாடல் என திமுக அரசு இப்போது பேசி வருகிறது.

ஆனால் அதிமுக ஏற்கனவே திராவிட மாடலை உருவாக்கி சமூக நீதியை செயல்படுத்தி வந்தது. அதிமுக ஆட்சிகாலத்தில் பெண்களுக்காக முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை சமுக நீதி நோக்கோடு செயல்படுத்தப்பட்டன. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட திட்டத்தை ரத்து செய்வது தான் திராவிட மாடலா?’’ என்று திமுகவை வறுத்தெடுத்தவர்,

‘‘பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நான் பாஜகவிற்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்தது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவர் கட்சிக்கு நான் வர வேண்டும் என்ற அவரது ஆசையை தெரிவிக்கிறார் வேறு ஒன்றும் இல்ல. நான்தான் இப்போது எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal