‘ நயனுக்கும், சிவனுக்கும் எப்போது கல்யாணம்’ என்ற கேள்விகளுக்கு விடைகிடைத்துவிட்டது. ஆனால், விரக்தியில் சொந்தல்கள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர். ஆனால் இப்போது இவர்களின் திருமணம் ஜூன் 9-ம் தேதி அதாவது நாளை மகாபலிபுரத்தில் நடக்கவிருக்கிறது. திருமணத்திற்கு கிட்டத்தட்ட 200 பேர் வருவார்கள், அதுவும் பலரும் விவிஐபி மட்டுமே என்பதால் பாதுகாப்பு கொடுப்பது கஷ்டம். ஆகையால் தான் திருப்பதியில் திருமணம் நடத்த அனுமதி கிடைக்கவில்லை என்பதால் மஹாபலிபுரம் 5 ஸ்டார் ஹோட்டலில் இந்து முறைப்படித்தான் திருமணம் நடக்கின்றது என விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருமண வீடியோவை தனியார் ஓடிடிக்கு விற்று விட்டார்கள். அவர்கள் இந்த திருமண நிகழ்வை கலர்புல்லாக காட்ட பிளான் போட்டுள்ளனர். இதன் காரணமாகவே இவர்களின் திருமணம் மகாபலிபுரத்திக்கு மாற்றப்பட்டுள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் திருமண புகைப்படங்களை நாளை மதியம் வெளியிடுவதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், லால்குடி வடக்குதெருவை சேர்ந்த சிவக்கொழுந்து, – மீனாகுமாரி தம்பதியின் மகன்தான் விக்னேஷ் சிவன். விக்னேஸ்வரன் என்ற தனது இயற்பெயரை சினிமாவுக்காக விக்னேஷ் சிவன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.

லால்குடி பூர்வீகம் என்றாலும் சிவக்கொழுந்துவுக்கு சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணி கிடைத்ததால் 1971-ம் ஆண்டு சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்டார். சிவக்கொழுந்துவின் மனைவி மீனாகுமாரி சென்னை வடபழனி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிவக்கொழுந்து தற்போது உயிருடன் இல்லை. தாய் மீனாகுமாரி விக்னேஷ் சிவனின் தங்கை ஐஸ்வர்யாவுடன் வசித்து வருகிறார்.

விக்னேஷ் சிவன் லால்குடியில் பிறந்து கொஞ்சம் வருடத்திலேயே சென்னைக்கு சென்று விட்டார். இருந்தாலும் லால்குடியில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா உள்ளிட்ட இரத்த பந்த உறவுகள் இன்னும் லால்குடியில்தான் வசித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம் குறித்து தெரிந்ததும் உறவினர்கள் எதிர்ப்பு குரலை உசத்தினாலும் அதை விக்னேஷ் தாயார் கண்டுகொள்ளவில்லை என்கின்றனர்.
அதேநேரம் லால்குடிகாரர்கள் நயன்தாராவை தங்கள் ஊர் மருமகளாக பார்த்ததோடு மட்டுமல்லாமல், திருமணத்திற்குப் பிறகு ஒருவேளை நயன்தாரா லால்குடிக்கு வந்தால் எந்தந்த கடைகளுக்கு செல்வார் என்பதைக் கூட பட்டியல் போட்டு, மகப்பேறு மருத்துவமனை வரை லிஸ்ட் போட்டு விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணத்திற்கு தயாராகியிருந்திருக்கின்றனர்.

ஆனால் லால்குடியில் இருக்கும் சொந்தங்களையும், ஊராரையும் திருமணத்திற்கு அழைக்க விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் தயாராக இல்லாதது அப்பகுதியினரை வேதனையடையச் செய்திருந்திருக்கின்றது. இதுகுறித்து ஊரார் தெரிவிக்கையில், ‘‘ விக்னேஷை சொந்தப் பையனாகவே நாங்க பாத்துக்கிட்டோம். அவனோட அம்மா,-அப்பா சென்னையில வேலைக்கு போயிட்டதால, அவனையும், அவன் தங்கச்சியையும் ரொம்பவுமே செல்லமா பாத்துகிட்டோம்ங்க. நாங்க ரொம்ப எதிர்ப்பார்ப்போடு காத்திருந்தோம், நயன்க்கு கிப்ட் மொதக்கொண்டு ரெடி செய்தோம். ஆனா அவங்க சினிமாக்காரங்க என்பதை காட்டி விட்டனர்.

விக்னேஷ் ஆசையாய் ஓடி விளையாடி, வளர்ந்த பெரியப்பா, -பெரியம்மாவைக்கூட திருமணத்திற்கு அழைக்கவில்லை. விக்னேஷ் சொத்துகள் இங்க கொஞ்சம் இருக்குங்க, விக்னேஷ் அம்மா போலீஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை செய்ததால அவ்வப்போது லோக்கல் போலீஸ் மூலம் சொத்துகள் குறித்து விசாரிச்சுட்டு இருப்பாங்க.

தங்க வேலை செய்யும் குடும்பத்திலேர்ந்து பிறந்த தங்கமான பையன் விக்னேஷ்ங்க, அவங்க குடும்பம் லால்குடியில செல்வாக்கான குடும்பம். பாரம்பரியமான பெரிய குடும்பம். இங்க உள்ள சொந்தக்காரங்கள கூப்பிடாம நாளை கல்யாணம் சென்னையிலத்தான் நடக்குதுங்க.
திருப்பதியில கல்யாணம் என்றபோது நாங்க எப்படி போய்ட்டு வரதுன்னு யோசிச்சோம், ஆனா சென்னையிலத்தான் என்றதும் மகிழ்ந்தோம். நாங்க அவங்க கூப்பிடாம கல்யாணத்துக்கு போனாலும் உள்ள விடமாட்டாங்க போல, அப்படித்தான் நாங்களும் கேள்விப்பட்டோம் என நொந்துக்கொண்டனர்.

விக்னேஷ் குடும்பத்தில் ஒருவர் தெரிவிக்கையில், விக்னேஷ் நல்லவன்தாங்க, ஊரவும், உறவும் மறக்கலங்க, இருந்தாலும் கல்யாணம் என வந்ததும் எங்க விருப்புக்கு மாறாத்தான் நடந்துக்கிட்டான்ங்க. அவங்க தாத்தா பாலசுப்ரமணியம் காலத்துலேர்ந்து லால்குடியில எந்தவொரு திருமணமா இருந்தாலும் எங்க குடும்பத்துல வேலைப்பாடு செய்து கொடுத்த மாங்கல்யம் தான் மணப்பெண் கழுத்த அலங்கரித்திருக்கும்ங்க. இப்ப எங்க வீட்டு மருமவளுக்கு எங்க கையால தாலி செய்ய முடியாதது வேதனைங்க. எங்க பரம்பரையே தங்க வேலை செய்யறதுதாங்க. காலம்மாறும்போது அங்கொன்றும் இங்கொன்றுமா எல்லாம் பிரிஞ்சு போயிட்டாங்க.

நாளைக்கு உன் மவனுக்கு கல்யாணம்ன்னும், பங்காளி மவனுக்கு கல்யாணம்ன்னும் ஊரு, உலகமே பேசும்போது நாங்க அங்க போவமுடியாதது வேதனைதாங்க’’ என்றனர்.

விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்திற்கு சொந்த உறவுகளுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை என்று லால்குடி சொந்தங்கள் விரக்தியில் இருப்பதை கண்கூடாக உணரமுடிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal