கலைஞரின் 99 -வது நினைவு தினத்தை முன்னிட்டு, கனிமொழி எம்.பி. பதிவிட்ட வரிகள்தான் அரசியலைத் தாண்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

கனிமொழி அரசியலுக்கு வருவதற்கு முன்பு பத்திகையாளர், கவிஞர், எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவராக விளங்கியவர். சிறுவயதிலேயே எமர்ஜென்சி காலகட்டங்கள், கைதுகள், அடக்குமுறைகள் என எல்லாவற்றையும் கடந்து வந்தவர்தான் கனிமொழி!

இந்நிலையில் இன்று கலைஞரின் பிறந்தநாளையொட்டி சில கவிதை வரிகளை பதிவிட்டிருக்கிறார். அந்த வரிகள்தான் அனைவரின் இதயத்தையும் கனக்கச் செய்திருக்கிறது. இதோ அந்த வரிகள்… ‘‘பெரியாரின் தொண்டர், மானமிகு சுயமரியாதைக்காரர், முத்தமிழ் அறிஞர், அண்ணாவின் ஆரூயிர்த் தம்பி, உடன்பிறப்புகளின் தலைவர், ஓய்வறியா சூரியன், தமிழினத் தலைவர். ஆனால், எனக்கு அப்பா… இசை நெகிழும் வீதிகளில் கனவுகளும், மீட்சிகளும் மறுக்கப்பட்ட குலத்தில் பிறந்த சிறுவன், நிர்ணயிக்கப்பட்ட தடங்களை நிராகரித்து ஆலயங்களின் நந்திகளை தகர்த்துப் பிரவேசித்தவன். தமிழினம் தனது அடையாளங்களை தேடிக் கொண்டிருந்த காலத்தில், போராளியாய் தன்னை இணைத்துக் கொண்டவன்.

ஒரு இனப்புரட்சியின் வித்துக்களை துளிர்களை கிளைகளை வேர்களை இன்றுவரை பாதுகாப்பவன். தென்றலைவிட மென்மையாய், புயலைவிட வேகமாய் விழும் உன் வார்த்தைகள் எத்தனை மௌனங்களை கலைத்திருக்கின்றன. வாழ்க்கையும் புறக்கணித்த விளிம்பு நிலை மனிதர்களின் மீட்பனாய் வந்தாய். தொழுநோயாளி ஒருவர் கலைஞர் இல்லையென்றால் நான் அநாதைப்பிணமாய் அகற்றவும் நாதியற்று போயிருப்பேன் என்றபோது தெரிந்தது, ஒரு தலைவனின் பெயர், போர்க்காலங்களில் மட்டுமே எழுதப்படுவதில்லை. சாமானியர்களின் கண்களில் ததும்பும் மகிழ்ச்சி பூக்களால் வார்க்கப்படுகிறது

தோல்விகளில் துவளும் இருண்மை சூழ்ந்த கனப்பொழுதுகளை கூட வாடிக்கையான உன் வேடிக்கை பேச்சால், நம்பிக்கையின் ஊற்றுகளாய் மாற்றிவிட முடிகின்றது உன்னால். விரிந்து நீளும் பொன்விழா வழித்தடத்தில் உன் புன்னகைக்குப் பின்னால் ததும்பும் வலிகளை யார் அறிவார்?’’ என்று அந்த வரிகளை அந்த புகைப்படங்களுக்கு நடுவில் கனக்கச் செய்திருக்கிறார்.

மேலும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ‘‘80 வருடங்களுக்கும் மேலாக, தமிழ் – தமிழர் என உழைத்து உயர்ந்தவர் தலைவர் கலைஞர். திராவிடக் கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்த அவரது வாழ்க்கை, வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டக் கூடிய வரலாறாகும்’’ என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி, கருணாநிதி ஆட்சியின் நீட்சி – தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி, தமிழ்நாடு வளர்ச்சிக்கு வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் கருணாநிதி’’ என்று பதிவிட்டுள்ளார்.

அப்பாவை சீராட்டியும், அதே சமயம் அண்ணனின் ஆட்சியை பாராட்டியும் கனிமொழி பதிவிட்டிருப்பது அவரது பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal