‘சசிகலா எந்த கட்சியில் இணைந்தாலும் அந்த கட்சி வலுவடையும், அவருக்கு குறிப்பிட்ட சமுதாய பின்னணி உள்ளது’ என சசிகலாவின் அரசியல் பலம் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீண்டும் பேசியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.க.வை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று பல்வேறு வியூகங்களை வகுத்துவருகிறார் சசிகலா. ‘தொண்டர்கள் என் பக்கம்தான்’ என அடித்துக்கூறியும் வருகிறார். இந்த நிலையில், நெல்லை சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இன்று புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது சசிகலாவை ஆதரித்து கருத்து தெரிவித்தார். அதில், சசிகலா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம். அவர் வந்தால் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். அரசியல் வட்டாரத்தில் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது.

அதிமுகவை எப்படியாவது கைப்பற்ற சசிகலா முயன்று வருகிறார். டெல்லி பாஜக மூலம் அவர் அதிமுகவில் நுழைய முயற்சிகளை எடுக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் கூட பாஜக நிர்வாகி விஜயசாந்தியை சசிகலா மீண்டும் சந்தித்தது இந்த சந்தேகத்தை அதிகரித்தது. இது போன்ற சூழ்நிலையில் சசிகலாவை பாஜகவுடன் இணைத்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக தலைவர் அண்ணாமலையிடம் நயினாரின் இந்த கருத்து பற்றி இன்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘‘சசிகலா பாஜகவில் இணைவது குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. கட்சியின் கருத்து அல்ல’’ என்று அண்ணாமலை தெரிவித்தார. இந்த நிலையில், அண்ணாமலைக்கு பதிலளிக்கும் வகையில் ‘‘சசிகலா பாஜகவில் மட்டுமல்ல எந்த கட்சியில் இணைந்தாலும் அந்த கட்சி வலுவடையும்’’ என்று மீண்டும் நயினார் நாகேந்திரன் இன்று பேசி இருக்கிறார்.

இதுகுறித்து நெல்லையில் அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘சசிகலா பாஜகவில் இணைந்தால் பாஜக வலுவாக இருக்கும். இது பாஜகவின் கருத்தல்ல. எனது தனிப்பட்ட கருத்து. சசிகலா எந்தக் கட்சிக்கு சென்றாலும் அந்த கட்சி வலுவாக இருக்கும். அவருக்கென ஒரு சமுதாய பின்னணி உள்ளது. ஜெயலலிதாவுடன் பலகாலம் பொதுவாழ்க்கையில் இருந்திருக்கிறார். அவருக்கென்று ஒரு செல்வாக்கு இருக்கிறது. நிச்சயமாக சசிகலாவின் வருகை எந்த கட்சிக்கு வந்தாலும் அது வலுவாக இருக்கும்’’ என்று மீண்டும் நயினார் அழுத்தம் திருத்தமாக கூறினார்

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal