சென்னையில் ‘ஸ்பா, மசாஜ் சென்டர்’ மற்றும் அழகு நிலையங்கள் செயல்படுவதற்கான தொழில் உரிமம் பெற, புதிய விதிகளை மாநகராட்சி உருவாக்கியுள்ளது. இவை, நேற்று நடந்த கவுன்சில் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் பெறபட்டுள்ளது.

ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் செயல்படுவதற்கான தொழில் உரிமம் பெற, மாநகராட்சி சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகளில் கூறியிருப்பதாவது:

  • தொழில் உரிமம் பெறுவதற்கு, ஒற்றை சாளர முறையில் சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் அடங்கிய குழுவினர் அனுமதி அளிப்பர்
  • கதவுகளை பூட்டிய நிலையில், மசாஜ் சென்டர்கள் செயல்படக் கூடாது. அவை இயங்கும் நேரத்தில் வெளிப்புற கதவு திறந்தே இருக்க வேண்டும்
  • அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இயங்க கூடாது; வாடிக்கையாளர்களுக்கு தனி வருகை பதிவேடு இருக்க வேண்டும்
  • எந்த வகையிலும், பாலியல் தொடர்பான சேவைகள் வழங்கக் கூடாது. காவல் துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் புகார் அடிப்படையில் சோதனை செய்வர்
  • உட்புறம் மற்றும் நுழைவு பகுதிகளில் ‘சிசிடிவி’ கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு சேவை வழங்கக் கூடாது
  • ஒருவருக்கு சேவை வழங்கிய பின், பணியாளர், தன் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அதன் பின் தான் அடுத்தவருக்கு சேவை வழங்க வேண்டும்
  • அதே போல், ஒருவருக்கு சேவை வழங்கியப் பின், அடுத்தவருக்கு சேவை வழங்குவதற்கு முன், கருவிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்
  • பக்க விளைவுகள் ஏற்படுத்த கூடிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது; உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் நபர், அதற்கான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இவ்வாறு, புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal